Skip to main content

கூட்டணி அறத்தைக் கடைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ள கட்சி பாமக: ராமதாஸ்

Published on 25/04/2019 | Edited on 25/04/2019



 

கூட்டணி அறத்தைக் கடைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ள கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

Ramadoss



இதுதொடர்பாக பாமக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19&ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வேட்பாளர்களை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து விட்ட நிலையில், வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை, மனுக்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து மே 2-ஆம் தேதி வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே 4 தொகுதி இடைத்தேர்தல்களில் பரப்புரை தீவிரமடையக் கூடும்.
 

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி உடன்பாட்டின்படி இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதையும் கடந்து, அவர்களின் வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய கடமை பா.ம.க.வுக்கு உள்ளது.

 

மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது அதிமுக கூட்டணி கட்சியினரிடையே அற்புதமான ஒருங்கிணைப்பு நிலவியது. எந்தத் தொகுதியில் எந்தக் கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார் என்று பகுத்துப் பார்க்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் நமது வேட்பாளர் தான் போட்டியிடுகிறார் என்று  கருதி அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் பணியாற்றினார்கள். அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட உழைப்பின் காரணமாகத் தான் கடந்த 18-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற தமிழகத்தின் 38 மக்களவைத் தொகுதிகளிலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களின் உறுதியான வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.


 

நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் அதே ஒருங்கிணைப்பு மற்றும் அசாத்தியமான  தேர்தல் பணிகள் தொடர வேண்டும். 4 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு உறுதியாக வேண்டும். அதை மனதில் கொண்டு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பாமக கடுமையாக உழைக்க வேண்டும். இடைத்தேர்தல் நடைபெறும்  தொகுதிகள் அடங்கியுள்ள கோவை, கரூர், மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களையும், அவற்றை ஒட்டிய மாவட்டங்களையும் சேர்ந்த பாமக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிமுக தேர்தல் குழுவுடன் இணைந்து வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.
 

கூட்டணி அறத்தைக் கடைபிடிப்பதில் முதலிடத்தில் உள்ள கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி என்பதை அனைவரும் அறிவார்கள். அது இந்த இடைத்தேர்தல்களிலும் நிரூபிக்கப்பட வேண்டும். அதற்காக அதிமுகவினரும், மற்ற கூட்டணிக் கட்சியினரும் எந்த அளவுக்கு தீவிரமாக பரப்புரையில்  ஈடுபடுகிறார்களோ, அதை விட 3 மடங்கு தீவிரமாக பா.ம.க.வினர் தேர்தல் பணியாற்ற வேண்டும்;  4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்''. இவ்வாறு கூறியுள்ளார். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரில் சோதனை! 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Former Minister R.P. Udayakumar car test

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் காரிலும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காரிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். தேர்தல் பரப்புரைக்காக தேனி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கனூர், கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது இந்த சோதனை நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.