publive-image

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''ஏழை வாக்காளர்களை, அவர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஆடு, மாடுகளை கொட்டகையில் அடைப்பது போல் அடைத்து வைத்துள்ளனர். வாக்காளர்களை விலைக்கு வாங்கி அமர வைத்துள்ளனர். நீங்கள் சரியான ஆம்பளையா இருந்தால்; மீசை வச்ச ஆம்பளையா இருந்தா; சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வாக்காளர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும்'' என பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,''தோல்வி பயத்தால் முதலமைச்சரை எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது ஏற்புடையதல்ல. சீமான் குறை சொல்ல வேண்டும் என்று சொல்லக்கூடியவர். அவர் ஆக்கப்பூர்வமான மனிதர் அல்ல. அரசியல் என்பது ஆக்கப்பூர்வமானவர்களுக்கு மட்டுமே இடமளிக்கும். ஒருவர் மேடையில் ஏறி அநாகரீகமாக பேசினால் பத்து பேர் நின்று பார்ப்பார்கள். அது அழகல்ல. ஆக்கப்பூர்வமாக பேச வேண்டும். நாகரீகமாக பேச வேண்டும். எதிர்மறையாக பேசியவர் எல்லாம் தமிழ்நாட்டில் காணாமல் போனவர்களின் பட்டியலில் உள்ளனர்'' எனத்தெரிவித்துள்ளார்.