Advertisment

பிரதமரை அனைத்துக் கட்சி குழு சந்திக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

ramadoss

தமிழ்நாட்டிலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த ஆணையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டாவது சமூகநீதி மலரும் என எதிர்பார்த்த நிலையில் இத்தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

Advertisment

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போது, அதில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை. இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க குழு அமைத்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்; ஆனாலும் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது’’ என ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதுதான் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு பின்னடைவாகும்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதுதான் இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு காரணம் ஆகும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது ஆகும். அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறி விட்டது. அதை மதித்து நடப்பாண்டிலேயேஇட ஒதுக்கீட்டை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தால், அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், சமபந்தமே இல்லாத வழக்குகளைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற மத்திய அரசு நிலைப்பாடு எடுத்தது தான் இந்தப் பின்னடைவுக்கு காரணம் ஆகும்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காக சில சக்திகள் திட்டமிட்டே குழப்பங்களை ஏற்படுத்தி வந்தன. அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக 50% இட ஒதுக்கீடுவழங்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்ததுடன், நீதிபதிகளையே ஆத்திரமூட்டும் வகையில் வாதங்களை வைத்ததால் தான், 'இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை'யல்ல என்று கூறி, இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அனைத்து மனுதாரர்களுக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 27% இடஓதுக்கீட்டை செயல்படுத்தத்தயாராக இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 50% இட ஒதுக்கீட்டை தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதால் தான், இட ஒதுக்கீட்டின் அளவு குறித்து முடிவெடுக்க குழுவை அமைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது; அதனால் தான் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு 27% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்ற நிலையில், அதை அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியிருந்தால் நடப்பாண்டிலேயே 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்திருக்கும். அதற்கான வாய்ப்பு திட்டமிட்டே முறியடிக்கப்பட்டது.

cnc

அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்னும் தொடங்கப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி, அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வழங்கப்பட்ட கால அவகாசம்,நாளை அக்டோபர் 27-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அக்குழு நாளைக்குள் முடிவெடுத்தால் அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் எந்தத் தடையும் இருக்காது.

எனவே, இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை நிறுத்தி வைத்து, அடுத்த சில நாட்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து உடனடியாகச் செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இது சாத்தியம் தான். இந்தக் கோரிக்கையை தமிழ்நாட்டிலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

all party meeting pmk Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe