Skip to main content

“மோடியால் குற்றம்சாட்டப்பட்ட ஊழல்வாதிகள் எல்லாம் அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள்” - முதல்வர் ஸ்டாலின்

Published on 19/07/2023 | Edited on 19/07/2023

 

All the corrupt people accused by Modi are in that NDAmeeting says Cm Stalin

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாதக் காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

 

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில்  நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக நடந்த இந்தக் கூட்டம்  நேற்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத்மான் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். மேலும், இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA)எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளுதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர், “பெங்களூர் பயணம் மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைந்தது. இந்தியாவினுடைய ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய நலன்களெல்லாம் தற்போது மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசினுடைய சர்வாதிகாரம், ஒற்றைத்தன்மை மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றில் சிக்கி  நாடு சிதையுண்டு போய்க் கொண்டிருக்கிறது. அதனால், பா.ஜ.க.வை மக்கள் தோற்கடிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

 

அதற்காக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்திருக்கிறது. பெங்களூரில் 26 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தோம். தமிழ்நாட்டில் எப்படிக் கூட்டணி அமைத்துத் தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டிருக்கிறோமோ, அதே போல் இந்தியா முழுவதும் இது போன்ற கூட்டணி அமைத்து வெற்றியைக் காணுவதற்குப் பல வியூகங்கள் எல்லாம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டம் எனக்கும் மட்டுமல்ல இந்திய மக்களுக்கும் நிச்சயமாக நம்பிக்கை தரக்கூடிய கூட்டமாக அமைந்திருக்கிறது.

 

இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு  ‘இந்தியா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக எதிர்க்கட்சிகளின் 3வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும்.  அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேசப்படும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பது தான் எங்கள் அனைவரின் கொள்கையாக இருக்கிறது. அதைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அமலாக்கத்துறை நடவடிக்கைகள் எல்லாம நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான். இன்னும்  நாட்கள் செல்லச் செல்லப் பல கொடுமைகள் நடக்கும். அதையும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். அதிலும் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். எல்லாவற்றையும் சட்டரீதியாக சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய அமலாக்கத்துறை நடவடிக்கைகள் எல்லாம் நியாயமானது என்று சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால், பா.ஜ.க  கூட்டணியில் இருப்பவர்களின் வழக்குகளை மட்டும் அமலாக்கத்துறையினர் கண்டும் காணாமல் இருப்பது தான் நியாயமானது என்று அவர் நினைக்கிறார். இன்றைக்குப் பிரதமர் மோடி  நடத்திய கூட்டத்தில் பக்கத்தில் யார் யார் எல்லாம் உட்கார வைத்திருந்தார்கள் என்பதைப் பார்த்தீர்களா? அவரால் குற்றம் சாட்டப்பட்ட ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் அந்தக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களைப் பிரதமர் மோடி அரவணைத்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில்,அவர் எங்கள் கூட்டணியை விமர்சிப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது” என்று கூறினார்.


 

சார்ந்த செய்திகள்