ADVERTISEMENT

தலைமையைச் சந்தித்த அஜித் பவார்; கலக்கத்தில் பாஜக

03:14 PM Jul 17, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும் சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது.

அதனை தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான, சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் தனது 8 எம்.எல்.ஏக்களுடன் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜ.க கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், அஜித்பவார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அஜித்பவாருடன் தனது ஆதரவு அமைச்சர்களான ஹசன் முஷ்ரிப், சகன் புஜ்பால், அதிதி தட்கரே, திலீப் வல்சே பாட்டீல் மற்றும் எம்.பி பிரபுல் பட்டேல் ஆகியோரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு தெற்கு மும்பையில் உள்ள ஒய்.பி.சவான் மண்டபத்தில் நடந்தது.

சரத்பவாரை சந்தித்த பின் பிரபுல் பட்டேல் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “கட்சியின் ஒற்றுமையை காக்குமாறும், எங்களை ஆசிர்வதிக்குமாறும் சரத்பவாரிடம் கோரினோம். ஆனால், எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சரத்பவார் பதில் எதுவும் கூறவில்லை. சரத்பவார் எங்களுக்கு கடவுள் போன்றவர். அதனால் அவரிடம் ஆசி வாங்க வந்தோம். இது முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு அல்ல. சரத்பவார் ஒய்.பி.மண்டபத்தில் இருப்பதாக கேள்விப்பட்டோம். உடனே மண்டபத்துக்கு வந்து அவரைச் சந்தித்தோம்” என்று கூறினார். இந்தச் சந்திப்பு மகாராஷ்டிரா பாஜகவினர் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT