Advertisment

’நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை’ - அஜீத்குமார்

a

Advertisment

அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்ததை அடுத்து, அஜித் அவசர அவசராக அறிக்கை வெளியிட்டுள்ள அதில் தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.

அஜீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயப்பாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

Advertisment

இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்ன வென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு. நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையேதான் நான் வலியுறுத்துகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடைமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு. வாழு வாழ விடு’’என்று தெரிவித்துள்ளார்.

a

ajithkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe