
கடந்த 6 ஆம் தேதி பேரவையில் பேசிய முதல்வர், ''நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. மருத்துவத்துறையில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாக உள்ளது. மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிடுகிறது. இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை நாளை மறுநாள் 8/1/2022 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து நீட்டுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்'' என்று கூறியிருந்தார்.
அறிவிப்பின்படி இன்று 8/1/2022 நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. சட்டமன்றத்தில் அங்கம் வகிக்கும் 13 கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் திமுக சார்பில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் அதிமுக சார்பில் வந்திருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், 'தமிழக அரசின் இந்த தீர்மானத்திற்கு அதிமுக துணைநிற்கும்' என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக சார்பில் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது, 'நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணைநிற்கும். அதேபோல் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.