AIADMK upset with EPS over insults at Murugan devotees  conference

தமிழக பாஜகவும், இந்து முன்னணி அமைப்பும் இணைந்து மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை அவமானப்படுத்தப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுகவினர் கொந்தளித்துள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளத் தோழமைக் கட்சிகளை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அழைத்திருந்தார். அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் நால்வருக்குரிய மரியாதையை தருவதில் நயினார் நாகேந்திரன் அக்கறைகாட்டவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “மாநாட்டிற்காக மெயின் ஸ்டேஜ் ஒன்றும், சாதாரண ஸ்டேஜ் ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தனர். மெயின் ஸ்டேஜில் அதிமுக முன்னாள் அமைச்சர்களை அமர வைத்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. சாதாரண ஸ்டேஜுல் உட்கார வைத்து விட்டனர். 4 பேரையும் மெயின் ஸ்டேஜில் ஏற்றவில்லையாயினும், தமிழகத்தின் எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஆர்.பி.உதயகுமாரை ஏற்றியிருக்க வேண்டும். அதில் நயினார் நாகேந்திரன் அக்கறைகாட்டவில்லை.

Advertisment

AIADMK upset with EPS over insults at Murugan devotees  conference

அதிமுக வி.வி.ஐ.பி.க்களை மாநாட்டிற்கு அழைத்து வந்து அவமானப்படுத்தியிருக்கிறது பாஜக. இதனை எந்த வகையிலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட சம்பங்கள் எல்லாம் நடக்கும் என்பதால் தான் பாஜகவுடன் கூட்டணியே கூடாது என நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தினோம். ஆனால், ஏதோ ஒரு சூழலில் கூட்டணி அமைத்து விட்டோம். தேர்தல் நெருங்க நெருங்க பாஜகவின் ஒரிஜினல் முகம் அம்பலமாகும். இப்படி அவமானப்பட்டதை ஜீரணிக்க முடியாத நிலையில், எடப்பாடி பழனிச்சாமியிடம் பாஜகவை பற்றியும் நயினார் நாகேந்திரனைப் பற்றியும் கொந்தளித்திருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி வருகிறார்" என்கின்றனர் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்.

பெரியார், அண்ணா ஆகியோர்களைப் பற்றி மாநாட்டில் எதிர்மறையாக பேசப்பட்ட, காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் பாஜகவுக்கு அதிமுக பதில் சொல்லவில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களை பாஜக அவமானப்படுத்தியதான விவகாரமும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.