Skip to main content

“நீ யாரா வேணாலும் இரு... அத பத்தி கவலை இல்ல” - பாஜக நிர்வாகியை வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர்

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

AIADMK minister and a BJP executive audio going viral on social media.

 

"நீ பிஜேபியா இரு.. எந்த பயலா வேணாலும் இரு.. எனக்கு அத பத்தி எந்த கவலையும் இல்ல.. இதை புரிஞ்சிகிட்டு பேசு.." என அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர், பாஜக பிரமுகருக்கு டோஸ் விடும் ஆடியோ வைரலாகி வருகிறது.

 

தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி சில நாட்களாகவே விரிசலும் உரசலுமாக போய்க் கொண்டிருகிறது.  பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர், அண்ணாமலையின் தலைமை மீது கொண்டிருக்கும் அதிருப்தியால் அங்கிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். இதனால், தமிழக பாஜகவினர் இதுதான் கூட்டணி தர்மமா... இதெல்லாம் நியாயமா? என அதிமுகவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள். ஓஹோ.. இப்போதான் கூட்டணி தர்மமெல்லாம் தெரியுதா.. எங்க கட்சியில இருந்து ஆளுங்கள இழுத்தப்ப அது தெரியலையா... நயினார் நாகேந்திரன் உட்பட இன்னும் சில எம்.எல்.ஏக்கள பஜகவுல சேர்த்துகிட்டப்ப எங்க போச்சு உங்க கூட்டணி தர்மம்.. எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரெக்டா வரும் என பதிலடி கொடுத்தனர்.

 

இது ஒருபக்கம் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்க., அண்ணாமலை இன்னொரு அணுகுண்டை திரி கொளுத்தி தூக்கி போட, மீண்டும் வெடிக்கத் தொடங்கியது அதிமுக - பாஜக மோதல். “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எனது மனைவி 1000 மடங்கு சக்தி வாய்ந்தவர்” என அண்ணாமலை பேசியதால் கடுப்பான மாஜி அமைச்சர்கள், “அண்ணாமலை உங்க மனைவியும் எங்க அம்மாவும் ஒண்ணா?” என அதிமுக அமைச்சர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இப்படி, இருதரப்பு கட்சியினரும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டது.

 

இதனால் பதற்றமான எடப்பாடி, அண்ணாமலையை பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதேபோல, பாஜக மேலிடமும் கட்சியினருக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன், பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசினார். "தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் அதிமுக - திமுக இடையே தான் போட்டி இருக்கும். பாஜக தனித்து போட்டியிட்டால் டெபாசிட்டை இழக்கும். பணம் பெறவே திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை முறைகேடு புகார் அளிக்கிறார்" என கூறினார்.

 

இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜகவின் எட்டயபுரம் மண்டலச் செயலாளர் காளிராஜ், முன்னாள் அமைச்சர் சண்முகநாதனை தொடர்பு கொண்டு கவலை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு கொஞ்சமும் அசைந்து கொடுக்காத மாஜி அமைச்சர் சண்முகநாதன்.. இத்தனை நாள் ஆத்திரத்தையும் மொத்தமாக கொட்டித் தீர்த்துள்ளார். இது தொடர்பான் ஆடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

 

அந்த ஆடியோவில், பாஜக நிர்வாகி காளிராஜ்.. “பாஜக பற்றி ஏன் அண்ணாச்சி இப்படி பேசுறீங்க” எனக் கேட்டதற்கு, “நீ பாஜகவா இரு.. எந்த பயலா வேணும்னாலும் இரு.. அது பற்றி எனக்கு கவலை இல்லை” என கோபமாக பதிலளித்துள்ளார். மேலும், “அதிமுக என்றால் என்ன என்றும், அதிமுகவை யார் வழி நடத்துகிறார்கள் என்றும் பாஜகவினருக்கு தெரியாது. நீங்கள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எடப்பாடிக்கு தான் அதிமுகவில் உள்ள நிர்வாகிகளின் முழு ஆதரவு இருக்கிறது. இது தெரியாமல் பாஜகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல் எல்லாம் எங்களிடம் வேண்டாம்” என வெளிப்படையாக எச்சரித்தார். இதற்கு பதில் ஏதும் சொல்ல முடியாமல் காளிராஜ் திணறினார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்