Skip to main content

வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்? ஓபிஎஸ் - இபிஎஸ் தனித்தனி ஆலோசனை; பரபரப்பில் அதிமுக 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

AIADMK issue; EPS Ops is a stand-alone consultation

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களை அறிவித்தும் தள்ளாடி வருகிறது அதிமுக. எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இபிஎஸ் தாக்கல் செய்திருந்த இடையீட்டு மனு மீது நேற்று தேர்தல் ஆணையம் பதிலளித்திருந்தது.

 

இந்த நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை முன்னிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக ‘ஓபிஎஸ் தரப்பினரையும்’ உள்ளடக்கிய பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்.  இது இடைக்கால ஏற்பாடு மட்டும் தான். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பில் இந்த இடைக்கால உத்தரவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ஒப்புதலுக்கான சுற்றறிக்கை படிவம் அதிமுக தலைமை அலுவலகத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் மிகக் குறைவாக இருப்பதால் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்குப் பதிலாக வேட்பாளர் விவரங்கள் கொண்ட விரிவான அறிக்கையை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்படும். பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற்ற பின் அதை விரிவான அறிக்கையாகத் தயார் செய்து தேர்தல் ஆணையத்திடம் திங்களன்று காலையில் கொடுப்பதற்காக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஏற்பாடு செய்துள்ளார்.

 

அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவங்கள் அனுப்பப்படும். பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்துகளைக் கேட்டு ஒப்புதல் மற்றும் கையொப்பங்களைப் பெற்று அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வழங்குவார்கள். இதன்பின் அந்த அறிக்கைகள் விரிவாகத் தயார் செய்யப்பட்டு திங்கள் காலை தேர்தல் ஆணையத்திடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  இந்த சந்திப்பில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

 

அதேபோல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.  இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் போட்டியிடவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்