Advertisment

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; ஓபிஎஸ் வாதங்கள் தாக்கல்

AIADMK General Secretary Election Case; Arguments filed by OPS

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை (17/03/23) அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

Advertisment

இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இதை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில் இந்த வழக்கு 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர். இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கே விரோதமானது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. இந்த குறிப்பிட்ட விதிகளில் விலக்கு பெற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதிஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வாதிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தயார் என்றும், தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும்வாதம் முன்வைக்கப்பட்டது.

அதேபோல் ஜே.சி.டி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் விசாரிக்கப்பட்டன. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து தங்களது வாதத்தை முன் வைத்த இபிஎஸ் தரப்பு, “நாங்கள்தான் அதிமுக என சில நபர்கள் கூறுவது புதிதல்ல; ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரே விளக்கம் எதுவும் கேட்கப்படாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பொதுக்குழு முடிவுகளே இறுதியானது; இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். கட்சிக் கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழு அதிகாரமிக்கது என்பதுதான். கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.

திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர பதவிகள் காலாவதியாகவில்லை; ரத்து செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தனக்கென ஒரு கட்சியை நடத்தி அதில் இருந்து எங்களை நீக்கியுள்ளார். பொதுக்குழு நடந்து கொண்டு இருந்த போதே ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தை சூறையாடினர்” என வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பன்னீர்செல்வம் தரப்பு வரும் மார்ச் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்த பின் நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பு எப்பொழுது வெளியாகும் என்பது குறித்தஅறிவிப்பை வெளியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்துதாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தேர்தலை அறிவித்ததும் அதில் முடிவுகளை அறிவித்ததும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது என்று கூறப்பட்டுள்ளது.

தாங்கள் நீக்கம் செய்யப்பட்டது முதல் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது வரை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. மனுத்தாக்கலில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் குறித்து நீதிபதியிடம் முறையிடும் பட்சத்தில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அறிவிக்கும் நாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு திங்கள் கிழமை அன்று வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பானதுஅதிமுக பொதுக்குழு வழக்கில்மாற்றம் ஏற்படுத்தாது எனினும், பொதுச்செயலாளர், பொதுக்குழு தீர்மானங்கள் ஆகியவற்றில் முக்கியத்தீர்ப்பாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe