Skip to main content

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கு; ஓபிஎஸ் வாதங்கள் தாக்கல்

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

AIADMK General Secretary Election Case; Arguments filed by OPS

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை (17/03/23) அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

 

இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இதை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு, “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முதலில் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தது. அதில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறி யாரும் போட்டியிடாதவாறு ஒருங்கிணைப்பாளர் பதவிகளைக் கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்துள்ளனர். பெரும்பான்மை உள்ளது என்ற முடிவின் காரணமாக இம்மாதிரியான முடிவுகளை எடுத்துள்ளனர். இது எம்ஜிஆரின் நோக்கத்திற்கே விரோதமானது.

 

கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த விதியை பொதுக்குழு உறுப்பினர்களால் திருத்த முடியாது. இந்த குறிப்பிட்ட விதிகளில் விலக்கு பெற்றே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டு வரப்பட்டன. தகுதிநீக்கம் செய்துவிட்டு பதவிகள் காலாவதி ஆகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்கமுடியும். ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிடவில்லை என்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து வாதிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து, கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதித்தால் வழக்கை திரும்பப்பெறத் தயார். பொதுச்செயலாளர் பதவிக்காக போட்டியிடுவதற்கான நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடத் தயார் என்றும், தொண்டர்கள் முடிவெடுக்கட்டும் எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

 

அதேபோல் ஜே.சி.டி பிரபாகர், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் விசாரிக்கப்பட்டன. அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

 

அதைத் தொடர்ந்து தங்களது வாதத்தை முன் வைத்த இபிஎஸ் தரப்பு, “நாங்கள்தான் அதிமுக என சில நபர்கள் கூறுவது புதிதல்ல; ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரே விளக்கம் எதுவும் கேட்கப்படாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் பொதுக்குழு முடிவுகளே இறுதியானது; இந்த முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். கட்சிக் கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழு அதிகாரமிக்கது என்பதுதான். கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.

 

திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதே தவிர பதவிகள் காலாவதியாகவில்லை; ரத்து செய்யப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தனக்கென ஒரு கட்சியை நடத்தி அதில் இருந்து எங்களை நீக்கியுள்ளார். பொதுக்குழு நடந்து கொண்டு இருந்த போதே ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக அலுவலகத்தை சூறையாடினர்” என வாதிடப்பட்டது. 

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பன்னீர்செல்வம் தரப்பு வரும் மார்ச் 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலைக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்த பின் நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பு எப்பொழுது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு எந்த முடிவையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தேர்தலை அறிவித்ததும் அதில் முடிவுகளை அறிவித்ததும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது என்று கூறப்பட்டுள்ளது. 

 

தாங்கள் நீக்கம் செய்யப்பட்டது முதல் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது வரை அனைத்தும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனுத்தாக்கலில் குறிப்பிட்டுள்ள விபரங்கள் குறித்து நீதிபதியிடம் முறையிடும் பட்சத்தில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு அறிவிக்கும் நாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பு திங்கள் கிழமை அன்று வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இவ்வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பானது அதிமுக பொதுக்குழு வழக்கில் மாற்றம் ஏற்படுத்தாது எனினும், பொதுச்செயலாளர், பொதுக்குழு தீர்மானங்கள் ஆகியவற்றில் முக்கியத் தீர்ப்பாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் கூட்டம் இருக்கணும்' - கட்டளையிட்ட த.மோ. அன்பரசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர்  வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.

நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.

இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.

Next Story

களத்தில் குதித்த 5 ஓ.பி.எஸ்.கள்- எடப்பாடி தரப்புக்கு கிடைத்த கிரீன் சிக்னல் 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
5 OPSs that jumped into the field – a green signal for the Edappadi side

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தனது தலைமையிலான அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அவ்வாறு தனது அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்காவிடில் அச்சின்னத்தை முடக்க வேண்டும். மேலும் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலாகத் தனது அணிக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதே சமயம் மக்களவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை சிலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பதிலில், இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது. எங்களிடம் உள்ள ஆவணத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. இதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தடையில்லை என க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம் ஓபிஎஸ் சுயேச்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 5 பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், ஓபிஎஸ்-இன் இந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு மேலும் ஒரு சரிவைக் கொடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.