
அதிமுகவில் நடந்து முடிந்த பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்த இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான முட்டல் மோதல்கள் நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் இடைக்காலபொதுச்செயலாளர் சென்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓபிஎஸ்-சும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை தசரா விடுமுறையை அடுத்து தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எடப்பாடி தரப்பு இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்த முயன்று வருவதாகவும், எனவே வழக்கு விசாரணையில் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இபிஎஸ் தரப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Follow Us