அதிமுக பொதுக்குழு வழக்கு; ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

AIADMK General Committee Case; The Supreme Court rejected the plea of ​​OPS

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு மட்டுமே தடை கோரி இருப்பதாகவும், தீர்மானங்களை எதிர்த்து அல்ல என்றும், எனவேமேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு 21/11/2022 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றுஎடப்பாடி பழனிசாமி தரப்பும், அவகாசம் வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பும் கோரின.

இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள்அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கி வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாகநாளை நடைபெற இருந்த விசாரணை டிசம்பர் 6-இல்திட்டமிட்டபடி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் நாளை நடைபெற இருந்த விசாரணை திட்டமிட்டபடி டிசம்பர் 6-இல் நடைபெற வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை திட்டமிட்டபடி டிசம்பர் 6-இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் எனத்தெரிவித்தனர்.

இந்நிலையில், டிசம்பர் 6-இல் விசாரிக்க இருக்கும் வழக்கை டிசம்பர் 13-க்கு தள்ளிவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஒரு கோரிக்கையை முன் வைத்தார். அதை நிராகரித்த உச்சநீதிமன்றம் அது தொடர்பாக உள்ள சிக்கலை டிசம்பர் 6-இல் தெரிவிக்கலாம் எனக் கூறி அதிமுக தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை டிசம்பர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

admk ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe