AIADMK executive meeting with Devanathan for erode byelection

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக பழனிசாமி அணியும், ஓ. பன்னீர்செல்வம் அணியும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரு அணிகளும் தங்களுக்கு ஆதரவு கோரி பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை பழனிசாமி சார்பாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் கமலாலயம் சென்று பாஜக மாநிலதலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்கும்படி ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவின் நிர்வாகிகள்இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தலைவர் தேவநாதனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஏற்கனவே தங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் பழனிசாமி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.