Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சரின் அராஜகம்; 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

AIADMK ex-minister's anarchy; Police registered a case under 3 sections

 

நிலம் கேட்டு மிரட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுக முன்னாள் சுற்றுலா மற்றும் உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜு. இவரும் இவரது மனைவி பிரேமாவும் மஞ்சூர் அருகே உள்ள மணிச்சல் கிராமத்தில் தங்களுக்குச் சொந்தமான 16 செண்ட் தேயிலைத் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். 

 

ராஜுவின் சகோதரருக்குச் சொந்தமான இடத்தை அதிமுக கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சுற்றுலா மற்றும் உணவுத்துறை அமைச்சருமான புத்தி சந்திரன் விலைக்கு வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜுவின் தேயிலைத் தோட்டத்தையும் விலைக்கு கேட்டுள்ளார். விலை குறைவாக இருந்ததால் விற்க மறுத்த ராஜுவிடம் புத்தி சந்திரன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தகராறு அடிக்கடி நடந்துள்ளது.

 

தொடர்ந்து, புத்தி சந்திரன் ராஜுவின் சகோதரர்களிடம் வாங்கிய நிலத்தில் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் ராஜுவின் தோட்டத்தில் இருந்த தேயிலை செடிகளையும் அகற்றியுள்ளார். இது குறித்து ராஜு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் புத்தி சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது மூன்று பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு-வருகிறது இ-பாஸ் நடைமுறை?

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
E-pass to Ooty and Kodaikanal

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகை மற்றும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகை நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கு ஒன்றில் வரும் மே 7ஆம் தேதி முதல் உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மே 7ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை இ-பாஸ் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என அரசுக்கும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே சுற்றுலாத்தலங்களில் அனுமதி தர வேண்டும். உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் இருந்து விலக்கு தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.