Skip to main content

சரணடைந்த சில நிமிடங்களிலேயே ஜாமீன் பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா 

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

AIADMK ex-minister Saroja released on bail within minutes of surrender

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா. முந்தைய அதிமுக ஆட்சியின்போது சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர், தனது துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடமிருந்து 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளரும், உறவினருமான குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

 

அதன்பேரில் சரோஜா, அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, சரோஜாவும் அவருடைய கணவரும் தலைமறைவாகினர். 

 

முதலில் முன்ஜாமீன் கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தை அணுகிய சரோஜா, பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சரோஜா ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிணைத் தொகை ரூ.25 லட்சத்துடன் இன்று சரணடைந்தார். சரணடைந்த சில நிமிடங்களிலேயே அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடி புகார் அளித்த குணசீலன் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது மோசடிப் புகார் கூறிய உறவினர் திடீர் மரணம்

Published on 27/01/2022 | Edited on 27/01/2022

 

A relative of a former ADMK minister who lodged a fraud complaint has died suddenly due to ill health.

 

அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடிப் புகார் அளித்த அவருடைய உறவினர் உடல்நலக்குறைவால் திடீரென்று மரணம் அடைந்தார்.

 

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் சரோஜா. அதிமுக முன்னாள் அமைச்சர். இவருடைய நெருங்கிய உறவினரும், அவரிடம் முன்பு உதவியாளராகவும் பணியாற்றி வந்தவர் குணசீலன் (68). நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் வசித்து வந்தார். 

 

சரோஜா, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரத்தில் போட்டியிட்டபோது வேட்புமனுவில் குணசீலனின் வீட்டு முகவரியைத்தான் பதிவு செய்திருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது 15 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 76.50 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக குணசீலன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளித்து இருந்தார். 

 

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சரோஜா மீதும் அவருடைய கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். 

 

அதேநேரம், அவர்கள் நாமக்கல் நீதிமன்றத்திலும் பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதையடுத்து சரோஜா தரப்பில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்னும் நிலுவையில் இருக்கிறது. 

 

இந்நிலையில், சரோஜா மீதும், அவருடைய கணவர் மீதும் மோசடி புகார் கூறிய குணசீலனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (ஜன. 26) காலையில் உயிரிழந்தார். 

 

குணசீலன், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு திமுகவில் இணைந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சரோஜாவை நவம்பர் 24 வரை கைது செய்யக் கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்

Published on 20/11/2021 | Edited on 20/11/2021

 

Former minister Saroja should not be arrested till November 24 - Chennai High Court

 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜா. முந்தைய அதிமுக ஆட்சியின்போது சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சராக இருந்தார். இவர், தனது துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக 15 பேரிடமிருந்து 76.50 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, மோசடி செய்துவிட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளரும், உறவினருமான குணசீலன் என்பவர் நாமக்கல் மாவட்டக் குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.

 

அதன்பேரில் சரோஜா, அவருடைய கணவர் மருத்துவர் லோகரஞ்சன் ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யக்கூடும் என சரோஜாவும் அவருடைய கணவரும் முன்ஜாமீன் கேட்டு நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு, ஏற்கனவே இரண்டுமுறை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மூன்றாவது முறையாக கடந்த நவ. 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்தது. ஆனால், நவம்பர் 15ஆம் தேதி காலை சரோஜா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெறுவதாக கூறினார். அதற்கு நீதிபதியும் அனுமதி அளித்ததை அடுத்து, முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்றனர்.

 

அதனையடுத்து, சரோஜாவும் அவரது கணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். அதில், ‘வேலை வாங்கித் தருவதாக கூறி யாரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபடவில்லை. புகார் அளித்துள்ள குணசீலன் எங்களது உறவினர்தான். குடும்ப பகை காரணமாக பொய்ப் புகார் அளித்துள்ளார். சத்துணவு அமைப்பாளர்களைத் தகுதியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள்தான் நியமிக்கின்றனர். இந்தப் புகார் தொடர்பாக ராசிபுரம் போலீசார் ஏற்கெனவே தங்களிடம் விசாரித்துள்ளனர்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

 

இந்த மனு, நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு நேற்று (19ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, இதுதொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரினார். 

 

அதையடுத்து நீதிபதி எம். நிர்மல்குமார், வழக்கு விசாரணையை நவ. 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். மேலும், நவ. 24ஆம் தேதி வரை சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.