கடந்த 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 19 வார்டுகளில் அதிமுக 5, திமுக 4, பாமக 4, சுயேட்சை 4, பாஜக 1, தேமுதிக 1 என வெற்றி பெற்றதில் அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை ஒன்றியக்குழு தலைவராகவும், பாமகவை சேர்ந்த பூங்கோதை துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரோனாவால் பரூர் அதிமுக கவுன்சிலர் மல்லிகாவும், அவரது கணவர் பாலதண்டாயுதமும் உயிரிழந்தனர். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த மதியழகன் வெற்றிபெற்றார். அதையடுத்து திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. இதனால் அதிமுக சேர்மன் செல்லத்துரை பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் தனம் சிவலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதையடுத்து அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.

Advertisment

இந்நிலையில் கடந்த 21.12.2021 அன்று திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேச்சை உறுப்பினர்கள் 15 பேர் ஊராட்சி ஒன்றிய மக்களின் நலனுக்கு எதிராகவும், தமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், பஞ்சாயத்துச் சட்டங்களுக்கு விரோதமாக நடந்து வருவதாகவும், ஒன்றியக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் நம்பிக்கையை ஒன்றியக்குழு தலைவர் இழந்து விட்டதால் செல்லத்துரைக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மனுவினை விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமாரிடம் அளித்தனர்.

Advertisment

அதனடிப்படையில் நேற்று (05.03.2022) விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நம்பிக்கை இல்லா தீர்மான மனு மீது ரகசிய ஓட்டெடுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக, அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்தனர். கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் ரகசிய வாக்கெடுப்பு நடந்து கொண்டிருந்த போது ஒன்றிய சேர்மன் செல்லதுரை, வாக்குப் பெட்டியை மேசை மீது தூக்கிப் போட்டு ரகளையில் ஈடுபட்டார். கோட்டாட்சியர் ராம்குமார் மற்றும் காவல்துறையினர் பல கட்டமாக சமாதான பேச்சில் ஈடுபட்டும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவிய நிலையில் ஒன்றிய சேர்மன் செல்லதுரை நம்பிக்கை வாக்கெடுப்பில் இருந்து, வெளிநடப்பு செய்தார். பின்னர் நடைபெற்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் சேர்மன் செல்லத்துரைக்கு எதிராக 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். 19 ஒன்றியக் குழு உறுப்பினர்களில்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 16 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வாக்களித்திருந்ததால் ஒன்றிய சேர்மன் செல்லதுரை பதவி இழந்தார். இதனிடையே நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பிலிருந்து வெளிநடப்பு செய்த, ஒன்றிய சேர்மன் செல்லதுரை தனது ஆதரவாளர்களுடன் விருத்தாசலம் - கடலூர் சாலையில் அமர்ந்து, தேர்தல் முறைகேடு நடப்பதாக கூறி, மறியலில் ஈடுபட்டனர். பின்பு காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Advertisment

ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய சேர்மன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று, அவர் பதவி இழந்ததும் அது தொடர்பாக நடைபெற்ற பிரச்சனைகளும் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.