ADVERTISEMENT

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

12:31 PM Mar 28, 2024 | ArunPrakash

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

ADVERTISEMENT

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT