Advertisment

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு!

AIADMK-BJP alliance break

அதிமுக - பாஜக கூட்டணியில், அண்ணாமலை பேச்சுகளால் முரண்கள் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்வினையாற்றி இருந்தனர். அதேபோல அண்மையில் அண்ணா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக - பாஜக கூட்டணி இல்லை எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்திற்கு அடுத்த இரண்டு நாட்களிலேயே பாஜக - அதிமுக கூட்டணியில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தி இருந்தார். அதே சமயம் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கூட்டணிக்காக பாஜகவிடம் அதிமுக பணிந்து போன பிறகும், அண்ணா பற்றிய தன்னுடைய பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு தெரிவிக்க மறுத்துவிட்டார். கூட்டணி என்பதற்காக இறங்கிப் போக முடியாது என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

அண்ணாமலை குறித்து பாஜக தலைமையில் புகார் அளிப்பதற்காக மூத்த அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றிருந்த நிலையில், அவர்களைச் சந்திக்க மத்திய அமைச்சர் அமித்ஷா மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து பியூஷ் கோயல், நட்டாவை மட்டும் சந்தித்து விட்டுத் திரும்பி இருந்தனர். அண்ணாமலையை மாற்ற வேண்டும் என நட்டாவிடம் அதிமுக தலைவர்கள் வைத்த கோரிக்கையை நாட்டா நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. பாஜக தம்மை உதாசீனப்படுத்துவதால் கூட்டணி முறிவை அதிமுக தலைமையே உறுதிப்படுத்த வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்துவதாகத்தகவல் வெளியாகி இருந்தது. அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி. முனுசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மாநிலத் தலைமை, கடந்த ஓராண்டாக வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு,அதிமுகவின் மீதும், அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது.பாஜக மாநிலத் தலைமை கடந்த ஆகஸ்ட்20 அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இ.பி.எஸ்ஸையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பான ஓர் சூழ்நிலையைஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தலைமையில் 25ம் தேதி கூடிய மா.செ. கூட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதிமுக இன்று முதல் பா.ஜ.க.விலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது எனும் ஏகமனதான தீர்மானத்தை அறிவிக்கப்படுகிறது. 2024 தேர்தல் இ.பி.எஸ். தலைமையிலான அதிமுக மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து சந்திக்கும்” என்றார். இதனைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Alliance admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe