Skip to main content

“என்னைப் போன்றோருக்கு என்ன நடக்கும் என அச்சமாக உள்ளது” - சீமான்

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

“Afraid of what will happen to people like me”- Seeman

 

ராகுல் காந்திக்கே இந்த நிலைமை என்றால் என்னைப் போன்றோருக்கு என்ன நடக்கும் என்ற அச்சம் உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் நாம் தமிழர் கட்சியின் குருதிக் கொடை பாசறையின் தலைமை அலுவலகமான திலீபன் குடிலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “40 பேருக்கும் மேல் இறந்துள்ளார்கள். இது எப்படிப் பார்த்தாலும் சூதாட்டம்தான். ஆன்லைன் சூதாட்டம் எந்த வழியில் வந்தாலும் தடை செய்ய வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் இழுத்தடித்துக் கொண்டு இருக்கக் கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அதிகாரம் இல்லையென சொல்வதற்கு மக்களால் தேர்வு செய்யப்படாத ஆளுநருக்கு எப்படி வந்தது. இவரது அதிகாரம் என்ன? அந்த பதவி எதற்கு? 8 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களின் நலன் சார்ந்து ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது அதற்கு கையெழுத்திட முடியாது எனச் சொல்வதற்கு அவர் யார்? 

 

தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு வன்மம் உள்ளது. என் இனத்தின் பகைவனாக நான் பார்க்கிறேன். அதற்கு நேரெதிராக பாஜகவை மானிட குலத்தின் எதிரியாகவே பார்க்கிறேன். கருத்து சொன்னதற்கெல்லாம் தண்டனை எனக் கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்ட பொறுப்பை பறிப்பது என்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலை. அது கொடுங்கோன்மை அதை ஏற்க முடியாது. அது யாருக்கு நிகழ்ந்தாலும் ஏற்க முடியாது. அதனால் தான் அதை எதிர்த்து அறிக்கை கொடுத்தேன்.

 

அவருக்கு சிறைத் தண்டனை கொடுத்ததே வேடிக்கை. 30 நாட்களில் பிணை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அவர் வழக்கை பார்த்துக் கொள்ளட்டும். அதனால் மக்கள் கொடுத்த பதவியை தகுதி நீக்கம் செய்தது என்பது தவறு. அதை எல்லாருக்கும் செய்ய வேண்டியதுதானே. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ராகுலை விட மோடி நாட்டைப் பற்றி மோசமாக பேசியுள்ளார். அவ்வளவு பெரிய குடும்ப பின்னணி கொண்ட ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் என்னைப் போன்ற சாதாரணமானோருக்கெல்லாம் என்ன நடக்கும்.ரொம்ப அச்சமாக உள்ளது. எதிர்காலத்தில் ஜனநாயகம் இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இளைஞர்கள் சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள்'- கார்த்தி சிதம்பரம் பேச்சால் பரபரப்பு

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
'Youngsters are going to Seeman, Vijay party' - Karthi Chidambaram's speech stirs up excitement

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாஜி திருநாவுக்கரசர், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் தொகுதி ஜோதிமணி எம்.பி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில்,  சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேச்சு சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது.

அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளால் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதனால், நம் கட்சியில் பலம் இல்லை என்று கூறவில்லை. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் விரும்பினார்கள். அதனால்  காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தமிழ்நாட்டில் ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருந்தது. தற்போது 3-வது இடத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம். அதே நேரத்தில்  நம் கட்சியை சில கட்சிகள் தொட்டுவிடும் நிலையில் உள்ளது. கட்சியில் எம்.பிகளை  மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி வளர்ந்துவிட முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்எல்ஏகள் அதிக அளவில் இருந்தால் தான் கட்சி வளரும். வளர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சி (திமுக) தற்போது ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். தேர்தலில் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகள் நம்மை கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் சங்கடப்படுகிறார்கள். ஆனால், திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை, பிரச்சனைகளை பற்றி அறிந்து அவர்களுக்காக பேசி தங்கள் கட்சியின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

அதேபோல, நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்தால்தான் மக்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். மக்களிடம் மக்கள் மனதில் நாம் இடம்பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தட்டு மக்களின் மக்கள் பிரச்சினைகள், உரிமைகளுக்காக பேச வேண்டும். இளைஞர்கள் நம் கட்சியைவிட  சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள். மக்களின் கவனத்தை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இன்று பல கட்சிகள் வந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கான மாற்றம் வேண்டும்'' என்று பேசினார். இந்தப் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Next Story

மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை!

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Madurai Dt ntk executive Balasubramani incident

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதற்கிடையே இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். அதோடு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

இத்தகைய சூழலில் மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாவட்ட வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம் போல் இன்று அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலசுப்பிரமணியம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.