/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2908.jpg)
அதிமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பேசியதாவது; “திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களான நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்றவில்லை. குறிப்பாக மக்களுக்கு நன்மை செய்யாமல் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஏழை, எளிய சாமானிய மக்களின் ஆட்சியாக இருந்துவந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்கு பிறகு மின் கட்டணம், சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தமிழகம் மின்மிகை மாநிலமாக இருந்தது. ஆனால் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மின் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. ஸ்டாலின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிதாக மக்கள் மீது சுமையை திணிக்கும் அரசாக உள்ளது. எனவே வருகின்ற பாராளுமன்றம், மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த ஆட்சி நடக்க கூடாது என்று மக்கள் விரும்புவதைப் போல திமுகவினரும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க கூடாது என்று விரும்புகிறார்கள்.
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், பன்னீர்செல்வம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். தலைமை கழகத்தில் புகுந்து ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடத்தை அடித்து உடைத்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆன்மா அடித்து நொறுக்கியவர்களை சும்மா விடாது. இதற்கு துணை போன திமுக அரசையும் சும்மா விடாது. வருகின்ற பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்” இவ்வாறு தங்கமணி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான ரத்தினவேல் பேசியதாவது; “மக்களைப் பாதிக்கும் வகையில் திமுக அரசு மின் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக அரசு பெண்களுக்கு ஆயிரம் வழங்கும் திட்டம், நீட் தேர்வு ரத்து எனத் தேர்தல் வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை. எடப்பாடியார் தலைமையில் 4 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் எண்ணற்ற வளர்ச்சி செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே மக்களுக்கு விரோதமாக செயல்படும் திமுக அரசுக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)