
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ள பருத்திபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அரக்கோணம் அரசு மகளிர் கல்லூரி கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 1ஆம் தேதி சோளிங்கர் அடுத்துள்ள கொடைக்கல் கிராமத்தில் அமைந்துள்ள மலைக்கோவிலில் திமுக நிர்வாகியாக இருந்த தெய்வச்செயல் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை அப்பெண் முன்வைத்திருந்தார். எனவே பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்குத் தெய்வச்செயல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும்,தன்னை வற்புறுத்தி மற்றவர்களுக்கு பாலியல் ரீதியாக இரையாக்க முற்பட்டு வருகிறார் எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பதற்காக அரக்கோணம் நகரக் காவல் நிலையத்திற்கு வழக்குப்பதிவு செய்ய இளம்பெண் சென்றுள்ளார். அங்கு வழக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்டது. மேலும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. எனவே ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகத்திற்கு அப்பெண் சென்றுள்ளார். அங்கு நடத்தப்பட்ட விசாரணையின் பேரில், அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 10ஆம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு தெய்வச்செயல் சுமார் 20 பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்துள்ளார் என்ற மற்றொரு புகாரையும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருந்தார். இந்த புகார் மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
அதே சமயம் திமுகவின் அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த தெய்வச்செயலை அப்பொறுப்பில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி நீக்கியிருந்தார். இந்நிலையில் அரக்கோணத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில், முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அதிமுகவினர் இன்று (21.05.2025) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவரை (திமுகவின் முன்னாள் நிர்வாகி) கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ரவி மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ. அரி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.