“முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?” - அ.தி.மு.க. கேள்வி!

ADMK question What is CM MK Stalin going to answer

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடுகள் நம்மை விட்டு கொஞ்சமும் நீங்கவில்லை. அதற்குள், அதே மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் திமுக இளைஞரணி கூட்டத்தில் ‘பீர்’ மதுபானம் பரிமாறப்பட்டதற்கு, ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?.

அதுவும், ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டில் தான் பீர் வழங்கப்பட்டதாகவே செய்திகள் வருகின்றன. ‘திமுக எம்.எல்.ஏ.வுக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று சொல்லப் போகிறாரா முதல்வர் மு.க. ஸ்டாலின்? தன் கட்சியின் அயலக அணி மாவட்ட பொறுப்பாளராக இருந்த ஜாபர் சாதிக், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவனாகச் செயல்பட்டு வந்தது பற்றியே இன்று வரை முதல்வர் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லையே?.

திமுகவிற்கும் போதைப்பொருட்களுக்குமான தொடர்பையே விளக்க முடியாத இவரா, போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பார்?. வாய்ப்பே இல்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே போதையின் பாதையில் தி.மு.க. யாரையும் கூட்டிச் செல்ல வேண்டாம். போதைப்பொருள் புழக்கம் ஒழிய, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் நல்லாட்சி அமைவதே ஒரே வழி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

admk kallakurichi mk stalin rishivandiyam
இதையும் படியுங்கள்
Subscribe