Advertisment

என் முன்னாடி உட்காரக்கூடாது... பஞ்சாயத்து ஆபிஸுக்கு வந்த அவ்வளவுதான்... ஊராட்சி பெண் தலைவரைச் சாதி கூறி மிரட்டிய அதிமுக பிரமுகர்!

admk

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகேயுள்ள அத்திக்காட்டானூர் காட்டு வலவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். தாரமங்கலம் ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளராக இருக்கிறார். இவருடைய மனைவி அம்சவள்ளி. இவர், டி.கோணகாபாடி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மோகன், சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவராகவும், டி.கோணகாபாடி ஊராட்சியில் 5- ஆவது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். இவருடைய மனைவி நிரஞ்சனா, இந்த ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர்.

Advertisment

இதுவரை பொதுத் தொகுதியாக இருந்துவந்த டி.கோணகாபாடி ஊராட்சி, சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது பட்டியல் சமூகத்திற்கான ரிசர்வ் தொகுதியாக மாற்றப்பட்டது. அதையடுத்து, முதல்முறையாகப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அம்சவள்ளி இந்த ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றிபெற்றார். இந்த அம்சவள்ளியைத்தான், சாதிப்பெயரைச் சொல்லி மோகன் ஆபாசமாகத் திட்டியதாகப் புகார் பதிவாயிருக்கிறது. இதுகுறித்து அம்சவள்ளி கையெடுத்துக் கும்பிட்டபடி, 'காவல்துறை மோகன்மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதாக' கண்ணீர்மல்க கூறிய காணொலிப்பதிவு சமூக ஊடகங்களில் பரபரப்பைக் கூட்டியது.

Advertisment

''கடந்த 6.1.2020- இல் நான் டி.கோணகாபாடி ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டேன். ஜன.10- ஆம் தேதி, என்னுடைய அலுவலகத்திற்குச் சென்று தலைவருக்கான நாற்காலியில் அமர்ந்தேன். 5-வது வார்டு உறுப்பினரான மோகன், எடுத்த எடுப்பிலேயே ஆவேசமாக என் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு, ஆபாசமாகத் திட்டி சீட்டில் உட்காரக்கூடாது என்று ஒருமையில் மிரட்டினார். அந்த இருக்கை, அதற்கு முன்பு அவருடைய மனைவி நிரஞ்சனா தலைவராக இருந்தபோது உட்கார்ந்ததாம். அதனால் அதில் பிற சாதிக்காரர்கள் அமரக்கூடாது என்று கத்தினார்.

மோகன் தரக்குறைவாக திட்டியதால் நான் அழுதுகொண்டே அந்த அறையைவிட்டு வெளியே வந்துவிட்டேன். மறுபடியும், பஞ்சாயத்து ஆபீஸ் பக்கம் வந்தால் குடும்பத்தோட கொளுத்திடுவேன்னு மிரட்டினார். ரெண்டே மாசத்துல முடிச்சிருப்பேன். கரோனா வந்துட்டதால தப்பிச்சிட்டீங்கனு கொலைமிரட்டல் விடுத்தார்.

admk

எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட சிலோன் அகதிகள் குடியிருப்பில் குடிநீர்பிரச்னை இருப்பதால், புதிதாக குடிநீர் குழாய்ப் பதிக்க ஏற்பாடு செய்திருந்தோம். ஏப். 22- ஆம் தேதியன்று, மோகனுக்குச் சொந்தமான தேங்காய்நார் மில் அருகிலிருந்து குழாய் பதிக்கும் பணிகளுக்காக ஊராட்சி செயலாளர், டேங்க் ஆபரேட்டர் முனியன் ஆகியோருடன் நானும் கணவரும் சென்றிருந்தோம். அங்கு வந்த மோகன், எங்களை மேற்கொண்டு பணிகளைச் செய்யவிடாமல் தடுத்ததோடு, மீண்டும் என்னையும், கணவரையும் சாதிப் பெயரைச் சொல்லியும், ஆபாசமாகவும் திட்டினார். அப்போது தாரமங்கலம் போலீஸ்காரர் ஒருவரும் அங்கே இருந்தார். ஆனால் அவர் எதையும் கண்டுகொள்ளவே இல்லை. அதன்பிறகுதான் மோகன் மீது ஏப். 23- ஆம் தேதி தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்'' என்றார்.

அம்சவள்ளியின் கணவர் அளித்த புகாரின் பேரில், மோகன் மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளில் தாரமங்கலம் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். இந்த எப்.ஐ.ஆர். அன்றிரவு 8 மணிக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நாள் இரவு 8.45 மணிக்கு, ஏளங்காடு காலனியில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மோகனின் ஆதரவாளரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவருமான தனபால் ஒரு புகாரளிக்க டி.கோணகாபாடி ஊராட்சிமன்றத் துணைத்தலைவரான பிரபு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச்சட்டப் பிரிவு உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர். போடப்பட்டி ருக்கிறது.

''தனபால் என்பவர் அத்திக்காட்டானூர் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநராக இருக்கிறார். அவரும் எங்கள் சாதியைச் சேர்ந்தவர்தான். எங்கள் ஊராட்சியின் துணைத்தலைவர் பிரபுவும், நானும் சேர்ந்துகொண்டு தனபாலை தாக்கியதாகவும், அவரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும் பொய்யான புகார் அளித்திருக்கிறார். பிரபு என் நண்பர் என்பதால், அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகாரளித்தால், அவருக்காக நான் மோகன் மீதான புகாரை வாபஸ் பெற்றுவிடுவேன் என்று கருதி மோகனின் தூண்டுதலால் இவ்வாறு புகாரளித்துள்ளார்'' என்கிறார் அம்சவள்ளியின் கணவரான சதீஷ்குமார்.

இது ஒருபுறமிருக்க, ஓராண்டுக்கு முன்பு தாரமங்கலத்திலுள்ள எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் பெண் ஊழியர் ஒருவரை, போலீசார் முன்னிலையிலேயே மோகன் ஒருமையில் ஆபாசமாகத் திட்டித்தீர்க்கும் காணொலிப்பதிவும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

http://onelink.to/nknapp

இப்பிரச்சனை தொடர்பாக மோகனிடம் விளக்கம் கேட்டோம். "நான் யாரையும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டவில்லை. பஞ்சாயத்து தலைவர் பொறுப்பிலிருந்துகொண்டு அம்சவள்ளியும், அவருடைய கணவரும் போலி பில் போட்டு ஊழல் செய்கின்றனர். அவர்கள் ஊழல் செய்வதற்கு நான் இடைஞ்சலாக இருப்பதால், என்மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாக ஒரு புகாரை ஜோடித்துள்ளனர்'' என்கிறார்.

எந்தத் தரப்பில் உண்மையிருக்கிறதென விசாரித்து, முதல்வர் தனிப்பட்ட அக்கறை செலுத்தும் சேலம் மாவட்டத்தில் சாதிய வன்மம் தலையெடுக்காமல் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதுதான் தமிழ்ச்சமூகத்துக்கு நல்லது.

issues eps Salem politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe