Skip to main content

சுயேட்சையாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்த சட்டமன்ற உறுப்பினர்... கட்சியில் இருந்து நீக்கிய ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ்!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

admk party mla suspended announced by party leaders eps and ops

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாளையுடன் (19/03/2021) நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்களது தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள சிலர், தங்களுக்கு மீண்டும் கட்சி வாய்ப்பளிக்காததால், சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில், சுயேட்சையாகப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது அ.தி.மு.க. தலைமை.

 

admk party mla suspended announced by party leaders eps and ops

 

இது குறித்து அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க. கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து, சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல், கட்சியின் வேட்பாளரை தோற்கடிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துள்ள காரணத்தாலும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆபாசமாகப் பேசிய எம்.எல்.ஏ-வை தண்டிக்க வேண்டும்”  - தேசிய மகளிர் ஆணையத்தில் ரீட்டா புகார்!    

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

Complaint to National Commission for Women that AIADMK MLA  threaten

 

கடந்த 2022 ஜனவரி 12-ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் ‘ஆபாச பேச்சுக்கு  அபராதம் செலுத்திய அதிமுக எம்.எல்.ஏ.! - ரீட்டா ‘ஓபன்’ பேட்டி!’ என்னும்  தலைப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் சம்பந்தப்பட்ட  வில்லங்க விவகாரம் குறித்து  செய்தி வெளியிட்டோம்.     

 

தற்போது அதே ரீட்டா விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகம் வந்து, தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக அளித்திருக்கும்  புகாரில்   ‘மான்ராஜ் எம்.எல்.ஏ.வும் அவருடைய ஆதரவாளர்களும் முன்ஜாமீன் பெற்று அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எந்தவித தவறும் செய்யாத என்னைப்  பற்றி மிகவும் தரக்குறைவாகவும், கொலை செய்துவிடுவதாகவும்,  விபச்சார வழக்கில் தள்ளிவிடுவோம் என்றும் சாதி குறித்துப் பேசியதாக வழக்கு போடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இதுகுறித்து  காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த வழக்கை வேறொரு புலனாய்வுக் காவல்துறைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.’ என்று  குறிப்பிட்டுள்ளார்.       

 

Complaint to National Commission for Women that AIADMK MLA  threaten

 

மேலும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு ரீட்டா அனுப்பியிருக்கும்  மனுவில்,  ‘நான் சார்ந்திருக்கும் அதிமுகவைச் சார்ந்த பெண்களிடம் தவறாகப் பேசி சமூக வலைத்தளங்களில் பரவச்செய்து, எங்களைப் பொதுவெளியில் நடமாடவிடாமல் செய்துவிட்டனர். எங்கள் குடும்பத்தில்  பல்வேறு பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக இருந்த மான்ராஜ்  எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய ஆதரவாளர்கள்,  இனிமேல் எந்தப் பெண்களையும் இதுபோல் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகப் பேசி  பதிவு செய்யாமல் இருக்கவேண்டும். தவறு செய்தவர் எம்.எல்.ஏ.வாக  இருந்தாலும்  தண்டிக்கப்படவேண்டும் என்பதை அனைவரும்  உணரும் விதத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கும்போது, பாதிக்கப்பட்ட  மற்ற பெண்களும் புகாரளிக்க முன்வருவார்கள். பெண்களை தங்கள்  காமப்பசிக்குத் தேவை என்ற எண்ணம் இனி யாருக்கும்  வராத அளவில் தண்டனை வழங்கவேண்டும். இந்த வழக்கில் என்னைச் சார்ந்திருக்கும் பெண்களுக்காக உயிரையும் தியாகம் செய்வேன்.’ என்று  உருக்கமாக எழுதியிருக்கிறார்.     

 

விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்து தனது மனக்குமுறலை ரீட்டா  வெளிப்படுத்திய நிலையில், நாம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.  மான்ராஜை அவருடைய கைபேசி எண் 84XXXXXX60-ல்  தொடர்புகொண்டோம். தொடர்ந்து அவருடைய செல்போன் ஸ்விட்ச்-ஆப் நிலையிலேயே இருந்தது. தனது விளக்கத்தை மான்ராஜ் எம்.எல்.ஏ. பகிர  முன்வந்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.    

 

 

Next Story

பேரவையில் நடந்த வாக்குவாதம்; இ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏவுக்கு கொலை மிரட்டல்?

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

eps team arakkonam mla ravi filed complaint against ops supporters

 

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டத்தினை தடை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது மசோதா மீதான விவாதத்தின் போது அனைத்துக் கட்சிகளில் இருந்தும் உறுப்பினர் ஒருவருக்கு இது குறித்து பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அதிமுக சார்பில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பேசினார்.

 

இதன் பின் சபாநாயகர் அப்பாவு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு வாய்ப்பளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை வரவேற்பதாக பேசி இருந்தார். இதற்கு இபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். இபிஎஸ் சபாநாயகரிடம் கூறும் போது, “ஒரு கட்சிக்கு ஒருவர் என்று பேச அழைத்தீர்கள். அதிமுக என்பது எங்கள் கட்சியாகத்தான் இருக்கிறது. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன். எங்கள் சார்பாக தளவாய் சுந்தரம் பேசினார். மறுபடியும் இப்படி பேச விட்டீர்கள் என்றால் என்ன அர்த்தம்” எனக் கேட்டார். முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையிலேயே ஓ.பன்னீர்செல்வத்தை பேச அனுமதித்ததாக சபாநாயகர் அப்பாவு அதற்கு விளக்கம்  அளித்தார்.

 

எடப்பாடி பழனிசாமியும், சபாநாயகரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக இபிஎஸ் ஆதரவாளர் கோவிந்தசாமியும் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மனோஜ் பாண்டியனும் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோவிந்தசாமியை அதிமுக இபிஎஸ் ஆதரவாளர்களும் மனோஜ் பாண்டியனை பன்னீர்செல்வமும் தடுத்து சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்து அதிமுக இபிஎஸ் ஆதரவு உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி அதிமுக எம்எல்ஏ ரவிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வுகளைக் குறிப்பிட்டு ஆபாசமாகவும், வெளியில் நடமாட முடியாது என்றும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தனக்கு மிரட்டல் வந்த இரண்டு தொலைபேசி எண்களையும் குறிப்பிட்டு திருவல்லிக்கேணி போலீசில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.