ADVERTISEMENT

எங்க கட்சின்னா சொன்னாங்க? அவங்க யாருன்னு தெரியலியே? அவரு அமைச்சர், நான் எம்.எல்.ஏ... அதிமுகவில் நடந்த சம்பவம்! 

12:37 PM Mar 09, 2020 | Anonymous (not verified)

அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மனும் கீரியும் பாம்புமாகி ஒருவரை ஒருவர் வீழ்த்தவேண்டும் என்ற நோக்கத்தோடு காய் நகர்த்தி வருகிறார்கள் என்று பேச்சு கிளம்ப, சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு, அதனைச் செய்தி ஆக்கினார் பத்திரிகை ஒன்றில் நிருபராக உள்ள கார்த்தி. அந்த செய்தி வெளியான நிலையில்தான் சிவகாசியில் அவர் மீது கொடூரத் தாக்கல் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT



‘தாக்கியவர்களையும் அவர்களை ஏவியவர்களையும் கைது செய்ய வேண்டும். வன்முறைக் கும்பலை ஒடுக்க வேண்டும்’ என தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, ஸ்டெல்லா பாண்டி, பூமுருகன் இருவரும் கைது செய்யப்பட்டனர். நான்கு வருடங்களுக்கு முன் சாத்தூரில் "நெற்றிக்கண்' என்ற பத்திரிகை நிருபரான கார்த்திகைச்செல்வன், சொந்தப் பகையினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதில் கூலிப்படையாக செயல்பட்டவன் ஸ்டெல்லா பாண்டி. அ.தி.மு.க.வின் இளைஞர் பாசறை கட்சியின் பாசறை நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்துள்ளான். இவனது நண்பன்தான் பூமுருகன்.

போலீஸ் விசாரணையின்போது, "நாங்க ரெண்டு பேரும் கட்சிக்காக உசிரகூட கொடுப்போம். எங்க கட்சி, எங்க அமைச்சர், எங்க எம்.எல்.ஏ. இவங்களப் பத்தி தப்புத்தப்பா செய்தி போட்டா சும்மா இருக்க முடியுமா? செய்தியை வச்சி பிளாக்மெயில் பண்ணுனதா கட்சி மட்டத்துல பேசிக்கிட்டாங்க. ஏற்கனவே கடுப்புல இருந்த நாங்க, வாயிலேய வெட்டுனோம். கொல்லணும்கிற எண்ணமெல்லாம் எங்களுக்கு இல்ல''’என்று வாக்குமூலத்திலும் கட்சி விசுவாசத்தைக் காட்டியுள்ளார்களாம்.

விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, "பத்திரிகையாளர் மீதான தாக்குதல் என்பதால் மிகவும் கவனமாகவே செயல்படுகிறோம். புகார்தாரர் சொன்னதை அப்படியே முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருக்கிறோம். கைதானவர்கள் இருவரும் யாருடைய தூண்டுதலிலும் செய்யலை'' என்றவர்கள் மேலும் சில தகவல்களைச் சொன்னார்கள்.

ADVERTISEMENT


போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், "இதே நிருபர், இரண்டு வருடங்களுக்கு முன் வேறொரு வாரமிரு பத்திரிகையில் வேலை பார்த்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அமைச்சர் தரப்பிலிருந்து உதவி செய்திருக்காங்க. இப்ப வந்த செய்தி பற்றி அமைச்சர் பெருசா அலட்டிக்கலை. "பெரிய பெரிய தலைவர்களை நானும் மேடையில் கடுமையாக விமர்சிக்கத்தானே செய்கிறேன். என்னைப் பற்றி எந்தப் பத்திரிகைதான் எழுதவில்லை. எழுதுபவர்களையெல்லாம் அடிப்பது என்றால் எத்தனை பேரை அடிப்பது'ன்னு தன் பாணியில் சொல்லி வருத்தப்பட்டாராம்.



அமைச்சருக்கு சாதிப் பின்புலம் என்பது கிடையாது. எல்லா சாதியிலும் தனக்கு விசுவாசமாக இருக்கக்கூடிய பலசாலிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். முரட்டு பக்தர்கள் என்று சொல்லக்கூடிய பெரும் கூட்டம், அமைச்சரின் பின்னால் இருக்கிறது. அவர்களை செல்லப்பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறார். அதனால், அமைச்சரின் ‘குட்புக்கில் இடம்பெற பலரும் முட்டி மோதுகிறார்கள். அந்தமாதிரி ஒரு எண்ணத்திலும்கூட, ஸ்டெல்லா பாண்டியும், பூமுருகனும் நிருபரைத் தாக்கியிருக்கலாம். ஆனா இதைக்கூட, கைதான இருவரும் ஒத்துக்கொள்ளவில்லை''’என்று சொல்லி முடித்தார்.


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் பேசினோம். "அந்த ரெண்டுபேரும் எங்க கட்சின்னா சொன்னாங்க? அவங்க யாருன்னு தெரியலியே? பத்திரிகை நிருபரை அடிச்சதெல்லாம் கொடுமைங்க. வழக்கம்போல, இதை வச்சும் ஸ்டாலின் அரசியல் பண்ணுறாரு?''’என்றார்.

ராஜவர்மன் எம்.எல்.ஏ.வோ, "அவரு அமைச்சராவும், நான் இப்ப எம்.எல்.ஏ.வாவும் இருக்கிறோம்னா அதுக்குக் காரணம், எங்களுக்குள்ள இருக்கிற வலுவான நட்புதான். இல்லாத பிரச்சனையை ஆளாளுக்கு கிளப்பிவிடறாங்க'' என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT