Skip to main content

“பணம் கொடுப்பதும் தெரியக்கூடாது; வாங்குவதும் தெரியக்கூடாது!” - ஆலோசனைக் கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஓபன் டாக்!

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

ADMK Minister rajendra balaji speech virudhunagar

 

விருதுநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களின் சார்பாக, ஒரே நாளில் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் திருச்சுழி ஆகிய 7 தொகுதிகளிலும், வாக்குச்சாவடி நிலை முகவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அ.தி.மு.க நடத்தியிருக்கிறது.
 
சிவகாசி கூட்டத்தில் ‘மைக்’ பிடித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, “தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டோம். எதிரிகளை வெல்வதுதான் ஒரே லட்சியம். 276 பேர் பூத்தில் உட்காரப் போகின்றீர்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 100 இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். மழை பெய்தால் ஈசல் எப்படி மொத்தமாக வருகிறதோ, அதுபோல அ.தி.மு.க கட்சி வெளிச்சத்தைப் பார்த்து, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்துகொண்டே இருக்கிறார்கள். அ.தி.மு.க போல ஒரு கட்சி இந்தியாவிலேயே கிடையாது. 


தமிழர்கள், தமிழச்சிகள், யார் உதவி செய்தாலும், அந்த உதவிக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள். ஒருவருக்கு ரேசன் கார்டு வாங்கிக் கொடுத்தீர்களென்றால், தலைமுறைக்கும் நினைத்துப் பார்ப்பார்கள். ஓட்டுச் சேர்க்கும்போது, படித்த இளைஞர்கள் பேன்ட், சட்டை போட்டிருப்பீர்கள். பெண்களுக்கு, யார் ஓட்டு சேர்த்தார்களென்று தெரியாது. எந்தக் கட்சிக்காக ஓட்டு சேர்த்தார்களென்று தெரியாது. உங்களை அதிகாரி என்று நினைத்துவிடக்கூடாது. இரட்டை இலைக்கு ஒட்டு போடுங்க என்று சொல்லிச் சொல்லி ஓட்டு சேர்க்கவேண்டும். அதற்கான நிதியுதவிகள் உங்களிடம் வந்து சேரும்.


இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க எங்கே மீட்டிங் நடத்தினாலும், கிடா வெட்டி, மட்டன் சாப்பாடுதான். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு, அரசியல் பண்ணக்கூடிய இயக்கமென்றால், அது அதிமுகதான். தொண்டர்களையும், நிர்வாகிகளையும் சாப்பிட வைத்து, அவர்கள் சாப்பிட்ட பிறகு சாப்பிடக்கூடிய தலைவர்கள் உள்ள கட்சி அ.தி.மு.க. ஏழு தொகுதிகளிலுமே சாப்பாடு ரெடி பண்ணியிருக்கிறோம்.


நிர்வாகிகள், கிளைக்கழகச் செயலாளர்கள் என எல்லோரும் வந்திருக்கின்றீர்கள். இரண்டாயிரம் ரூபாய் வைத்த கவர், முதலில் நான் ஒரு 5 பேருக்கு, இப்போது கொடுத்துவிடுகிறேன். இங்கே வராதவர்களுக்கும், வீடு தேடிப்போய், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கவர் கொடுத்துவிடுவார்கள். 276 பேருக்கும் கவர் போய்ச் சேர்ந்துவிடும். இது ஒரு சாம்பிள்தான். இது ஒரு அடிப்படை. இது ஒரு ஆரம்பம். அடுத்தடுத்து நடக்கும் கூட்டங்களில், இந்தப் பணிகளை விரிவுபடுத்திச் செய்வோம். மண்டல கமிட்டி பொறுப்பாளர்கள் என்று, ஒவ்வொரு மண்டலத்துக்கும் மூன்று பேரை போட்டிருக்கிறோம். அந்த மூன்று பேருக்கும் ரூ.2,000 வீதம் கவர் கொடுத்துவிடுகிறோம். அவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வேலை செய்வார்கள். மண்டல கமிட்டிக்குள்ளேயே, கிளைச்செயலாளர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் கட்சியின் அடித்தளம். 


நான் ஒபனாகப் பேசுகிறேன். தற்போது தேர்தல் ஒன்றும் நடக்கவில்லை. பத்திரிகையாளர்கள் பதிவுகூட பண்ணிக்கொள்ளலாம். ஒண்ணும் பிரச்சனை கிடையாது. ஒண்ணும் கவலை கிடையாது. இதையெல்லாம், இப்போதுதான் பேச முடியும். தேர்தல் அறிவித்துவிட்டால், கொடுப்பது தெரியக்கூடாது; வாங்குவது தெரியக்கூடாது; எடுப்பதும் தெரியக்கூடாது. ரகசியக்கூட்டம், ரகசிய ஆலோசனை எல்லாம் பண்ணுவோம். எப்படி ஜெயிப்பது என்று நமக்குத் தெரியும்.

 

cnc

 
திமுகவில் யார் இருக்கிறார்கள்? களத்தில் ஆளே இல்லை. தற்போது பார்த்தீர்களென்றால், 7,000 பேருக்கு கவர் கொடுக்கிறோம். இந்த மாவட்டத்தில், தொகுதிக்கு 1,000 பேர். சில தொகுதிகளில் 1,200 பேர். 7,400 தொண்டர்கள் சேரக்கூடிய கட்சியாக, இந்த விருதுநகர் மாவட்டத்தில், வேறு எந்தக் கட்சி இருக்கிறது? ஒரு கட்சியும் கிடையாது. நேற்றுதான் சொன்னோம். அதுவும் ஃபோன் மூலம் தகவல். வாட்ஸ்-ஆப்பில் போகிறது. இன்றைக்கு காலை 8 மணிக்கே, மண்டபத்தில் கூட்டம் கூடிவிட்டது. திமுகவில் ஆளே கிடையாது, அது ஐம்பெரும் தலைவர்கள் நிரம்பிய கட்சி. ஒவ்வொரு மாவட்டத்திலும் 5 பேர் இருக்கிறார்கள். அவ்வளவுதான்! அந்தக் கட்சியினர், வடநாட்டுக்காரனை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்து ஓட்டு போடுவார்களா? மாய மந்திரமா? ஜீபூம்பா-ன்னு சொல்லி ஓட்டு விழுவதற்கு?  அதெல்லாம் திமுகவுக்கு ஒட்டு விழாது. பட்டனைத் தட்டினால் இரட்டை இலைதான் விழும்.

 

பீகாரில் காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கும் என்றார்கள். ஜெயித்தது யார்? பி.ஜே.பி. நிதிஷ்குமார்தான் ஜெயித்தார். யாரெல்லாம் உழைக்கிறார்களோ? அவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. அரசியலை வைத்துப் பிழைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்.

 
நீங்கள் அனைவரும் உழைக்கவேண்டும். நான் இந்த விருதுநகர் மாவட்டத்துக்கு என்னவெல்லாம் கொடுத்திருக்கின்றேன். சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூரில் எல்லாம் அரசுக் கல்லூரிகள் வந்துவிட்டன. விருதுநகரில் மருத்துவக் கல்லூரி. அடுத்து பல் மருத்துவக் கல்லூரியும் வரப்போகிறது. சுகாதாரத்துறை செயலாளரிடம், அமைச்சரிடம் பேசிக்கொண்டே இருக்கிறேன். இந்த மாவட்டத்தில் எல்லா சாலைகளும் சரிசெய்யப்பட்டுவிடும். கிராமச் சாலைகளுக்கும் பட்டியல் எடுத்துச் செய்து கொண்டிருக்கிறோம். 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள், இரண்டு மாதத்திற்குள் சிவகாசி டவுணில் முடிக்கப்பட்டுவிடும்.

  
சிவகாசி நகராட்சிக்கு புதுக் கட்டிடம். திருத்தங்கல் நகராட்சிக்கு புதுக் கட்டிடம். எல்லா யூனியன்களுக்கும் கட்டிடம் கட்டி திறந்துவிட்டோம். எவ்வளவோ கொண்டு வந்திருக்கிறோம். தி.மு.க ஆட்சியில் இந்த விருதுநகர் மாவட்டத்துக்கு என்ன செய்தார்கள்? இரண்டு முன்னாள் அமைச்சர்கள் வாய்கிழியப் பேசுகிறார்கள். கே.கே.எஸ்.எஸ்.ஆரும், தங்கம் தென்னரசுவும் என்ன பண்ணினார்கள்? அவர்களின் தொகுதிக்குள் ஒரு அரசுக் கல்லூரி கொண்டுவர முடிந்ததா?  எதுவும் செய்யாமல், ஏமாற்றி ஓட்டு வாங்க நினைக்கக்கூடாது.   

 

nkn

 

இங்கே அமர்ந்திருக்கும்  ‘அப்பு’ என்னை தர்காவுக்கு கூட்டிச்செல்வார். நான் நெற்றியில் குங்குமத்துடனும், கையில் காப்பு கட்டிய கயிறுடனும் செல்வேன். குங்குமத்தை அழித்துவிட்டு வாருங்கள் என்று அவர்களும் சொல்ல மாட்டார்கள். நானும் அழிக்க மாட்டேன். மாதா கோவிலுக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். அங்கும் அப்படித்தான். என்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருப்பேன். அதே நேரத்தில், மற்றவர்களின் நம்பிக்கையோடு இணைந்து செயல்படுவேன். என்னைப்போய், அவர்களுக்கு எதிரி, இவர்களுக்கு எதிரி என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள். இஸ்லாமிய ஓட்டு, கிறிஸ்தவ ஓட்டு மட்டுமல்ல. பவுத்த ஓட்டும்கூட திமுகவுக்கு கிடைக்காது. திமுகவுக்கு யார் ஓட்டு போடுவார்களென்றால், வாடி, வதங்கி, நொந்து நூலாகி, சாகின்ற வரையிலும் திமுகவுக்கே ஓட்டுப் போடுவோம் என்று நினைப்பவர்கள் மட்டும்தான் போடுவார்கள். சிந்திக்கிற திமுகவினரும் அதிமுகவுக்கே ஓட்டுப் போடுவார்கள். 


ஸ்டாலின் நடிக்கிறார்; நாடகம் போடுகிறார். அண்ணா உருவாக்கிய தி.மு.க கலைஞர் இருந்தபோது இல்லை. கலைஞரிடம் இருந்த தி.மு.க, தற்போது ஸ்டாலினிடம் இல்லை. அப்படியென்றால் தி.மு.க எங்கே இருக்கிறது? பத்துக்கு பத்து அறைக்குள், கம்யூட்டர் ரூமுக்குள் கச்சிதமாக இருக்கிறது. மேக்கப் போட்டு நடிக்கிற ஸ்டாலினின் நடிப்பு தமிழகத்தில் எடுபடாது. இது எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக. அம்மா வளர்த்த கட்சி. யாராலும் அழிக்க முடியாது.” என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.