Advertisment

அதிமுகவும் ரஜினி கட்சியும் திமுகவை கும்மியடிக்கப் போகிறது!-கே.டி.ராஜேந்திரபாலாஜி பளிச்!

admk minister rajendra balaji press meet in salam

Advertisment

சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தபோது “அதிமுக ஆட்சியில் ஊழல் நடப்பதாக மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். மத்திய ஆட்சியில் திமுக இடம்பெற்றபோது, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தார்கள். கலைஞர் டிவி-க்கு ரூ.200 கோடி கைமாறியது. இதை மறைத்துவிட்டு ஊழல் குற்றசாட்டுகளை அதிமுக ஆட்சி மீது சுமத்துகிறார்கள். ஸ்டாலினே மாட்டப்போகிறார்.” என்று பேசியிருந்தார்.

இதற்கு திமுக எம்.பி. ஆ.ராசா “முதல்வர் மூன்றாம்தர மனிதரைப் போல பேசுகிறார். அதிமுக ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட கட்சி. அதிமுக ஊழல் கட்சியா? திமுக ஊழல் கட்சியா? பகிரங்கமாக சவால் விடுகிறேன். எல்லா அமைச்சர்களையும் கோட்டைக்கு கூப்பிடுங்க. எது ஊழல் கட்சி என்று விவாதம் நடத்த நான் தயார்.” என்று சவால் விட்டிருந்தார். கோட்டைக்கு வரச்சொல்லி திமுக தரப்பு மார்தட்டியதால், அதற்கு பதிலடி கொடுப்பதற்காக, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

“திமுக தலைவர் ஸ்டாலின் அக்கிரமமான ஒரு நடவடிக்கையைக் கையில் எடுத்து, தன்னுடைய கையாளாக இருக்கக்கூடிய, ஊழலின் மொத்த நாயகனான ஆ.ராசாவை வைத்து, முதலமைச்சர் எடப்பாடியாரையும், எங்கள் தலைவியையும் கேவலமாக விமர்சனம் செய்யக்கூடிய போக்கை வன்மையாகக் கண்டிக்கவேண்டும் என்ற உணர்வோடுதான், விருதுநகரில் பத்திரிக்கையாளர்களை அழைத்திருக்கிறேன்.” என்றவர் “கரோனா பாதிப்பில் தமிழகம் தத்தளித்து வரும் நிலையில், கடந்த 7 மாதங்களில் ஸ்டாலின் பெரிதாக என்ன செய்துவிட்டார்?'' என்றுகண்ணியமற்ற வகையில் வசை பாடினார். “எடப்பாடியாரை மரியாதையில்லாமல் பேசினால் இப்படித்தான் பேசுவேன்'' என்றார்.

Advertisment

மேலும் அவர் “திமுக ஆட்சியில் நடந்த கொலைப் பட்டியல், ஊழல் செய்து சேர்த்த சொத்துப் பட்டியலை நாங்கள் கையில் எடுத்துள்ளோம். சாதிக்பாட்சா மரணத்தில் என்ன நடந்தது? சாதிக்பாட்சாவின் மனைவி இன்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார். கஷ்டப்படுகிறது அந்தக் குடும்பம். சாதிக் பாட்சாவின் மனைவிக்குச் சேரவேண்டிய சொத்துகளைப் பிரித்துக் கொடுக்க மறுக்கின்றனர். பணத்தைக் கேட்டால் சாதிக்பாட்ஷாவி்ன் மனைவியை ஆள் வைத்து மிரட்டுகின்றனர். திமுகவினரின் டார்ச்சரால் தான் சாதிக்பாட்சா, அண்ணாநகர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு, ராசா உட்பட திமுக தலைவர்கள் தங்களது சொத்துப் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக உள்ளார்களா? நாங்கள் எங்களது சொத்துப் பட்டியலை வெளியிடத் தயாராக உள்ளோம். ராசாவுடன் நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆரம்பத்தில், ஒரு டி.வி.எஸ். 50 கூட இல்லாத ஆ.ராசாவுக்கு, இன்று கோடிக்கணக்கில் சொத்து எப்படி வந்தது? ராசாவால் இன்று வெளிநாட்டு காரில்தான் எப்படி செல்லமுடிகிறது. மனசாட்சிப்படி சொல்லட்டும். சொத்துகளை ராசா உழைத்து சம்பாதித்தாரா? இந்த சொத்துகள் எப்படி வந்தது? ஊழல் பெருச்சாளியாக ராசா திகழ்கிறார்.

காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாமா? உங்களை ஜெயிலுக்கு அனுப்பிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கின்றீர்களே? உங்களுக்கு வெட்கமே இல்லையா? கைது செய்து உள்ளே வைத்த காங்கிரஸோடு கூட்டணி வைக்கலாமா என்று திமுகவினர் கேட்க வேண்டாமா? திருடனுக்கு திருடன் என்ற வகையில்தான் காங்கிரஸோடு திமுக கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸில் திமுகவை அடமானம் வைத்து விட்டு எங்களை நீங்கள் குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது?

கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம்தென்னரசு போன்ற திமுக தலைவர்கள். உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குச் சென்று பிறந்தநாள் வாழ்த்து வாங்குகின்றனர். இது உங்களுக்கு கேவலமாகத் தெரியவில்லையா? உதயநிதி ஸ்டாலின் என்ன போராட்ட வீரரா? தமிழ்நாட்டுக்காக, தமிழக மக்களுக்காக, மொழிக்காக சிறை சென்றாரா? எதுவுமே கிடையாது. ஸ்டாலினின் மகன் என்பதற்காக, அவரது காலில் திமுக தலைவர்கள் விழலாமா? திமுகவில் உள்ள பெரிய தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் முன்பு கை கட்டி நிற்கலாமா? வெட்கமாக இல்லையா?

பாரதிய ஜனதா அழுத்தம் கொடுத்துத்தான் ரஜினி கட்சி ஆரம்பித்தார் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினி சுயமாக சிந்திக்கக் கூடியவர். ரஜினிகாந்த் அரசியலில் பாஜக பின்னணியில் இருந்தாலென்ன? முன்னணியில் இருந்தால் என்ன? திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? நாங்கள் ஒட்டுமொத்தமாக திமுகவை கும்மியடிக்கப் போகிறோம். திமுகவை படுதோல்வி அடையச் செய்வதே அதிமுகவின் ஒரே நோக்கம்.” எனப் பேசிவிட்டு, வார்த்தைக்கு வார்த்தை எடப்பாடி விசுவாசத்தை வெளிப்படுத்திவிட்டே ஓய்ந்தார்.

rajinikanth stalin admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe