மாநிலங்களவை பதவிக்காலம் நிறைவடைவதை குறிப்பிட்டு நடந்து முடிந்த மக்களவை தேர்லி்ல் போட்டியிடுவதற்கு கட்சி தலைமையிடம் மைத்ரேயன் வாய்ப்பு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, அடுத்து வந்த மாநிலங்களவை தேர்தலிலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த மைத்ரேயன் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் பதவி கொடுக்கவில்லை என்பதற்காக கட்சியில் இருப்பவர்களை விமர்சிக்க கூடாது என்றும், அரசியலில் ஏற்றத்தாழ்வு சகஜம் என்றும் கூறினார். மேலும் முந்தைய காலங்களில் எனக்கு சீட் மறுக்கப்பட்ட போதும் நான் மனம் தளராமல் கட்சிக்காக உழைத்தேன் அதற்காக அழவில்லை என்றும் தெரிவித்தார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாகவே மைத்ரேயனை பேசியது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலை காட்டுகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சமீப காலமாக மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி திமுக அல்லது பாஜகவில் இணையப்போவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து மைத்ரேயனிடம் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வரவில்லை என்றும் கூறுகின்றனர்.