publive-image

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அதிமுக, ஐஜேகே, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கிருஷ்ணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித்பவார், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தமிழகம் திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்று இல்லாமல் அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றன. பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க. சுதந்திரமாகத்தான் இருக்கிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் சுமார் 330 இடங்களை பா.ஜ.க கூட்டணி வெல்லும். சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.

Advertisment

அதிக இடங்களில் போட்டியிடும் என்று சில கட்சித் தலைவர்கள் கூறுவது அவர்களது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காகச் சொல்லக்கூடிய கருத்து. அதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க கட்சி அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த போது 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரி தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் தான் போட்டியிட்டது. அது போல் தான் அடுத்த வருடமும் இந்த கூட்டணி தொடரும்.

நூற்பாலைகள், கார்மென்ட்ஸ் தொழில் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி தான் கோவை மாவட்டம். பஞ்சு மற்றும் இதர கழிவு பஞ்சின் விலையை குறைக்க வேண்டும் என்று ஜவுளி துறையினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளைத்தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்வோம்” என்று கூறினார்.

Advertisment