ஜெயக்குமார் ஒட்டிய போஸ்டர்கள் கிழிப்பு... அதிமுகவில் உச்சக்கட்ட மோதல்!

ADMK inter politics jayalalitha posters erode

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று தமிழகம் முழுக்க அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நினைவு தின மரியாதை நிகழ்வில்கூட, கோஷ்டி அரசியலில் ஜெயலலிதாவின் போஸ்டர்களை கிழித்து ஜெயலலிதாவுக்கு அவமரியாதை செய்துள்ளது இதே அ.தி.மு.க.வை சேர்ந்த மற்றொரு குரூப்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் ஒரு கோஷ்டியாகவும், இவருக்கு எதிராக மாவட்ட அமைச்சர் கே.சி.கருப்பணன்ஒரு கோஷ்டியாகவும் அரசியல் செய்து வருகின்றனர். அமைச்சர் கருப்பணன் கோஷ்டியில் முன்னாள் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஜெயக்குமார் என்பவர் தலைமையில் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக அரசியல் செய்து வருகிறார்கள்.

இந்த ஜெயக்குமார், ஒன்றியக் கவுன்சிலராகவும் உள்ளார். அமைச்சர் கருப்பணன் மூலம் உறவு முறையாகிற முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்தைப் பெற்றுள்ள ஜெயக்குமார், வருகிற சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதி சீட்டுக்குப் பலமாக அடித்தளம் போட்டுள்ளார். இதுவே சிட்டிங் எம்.எல்.ஏதோப்பு வெங்கடாசலத்திற்கும், ஜெயக்குமாருக்குமான அரசியல் பகையாக உள்ளது.

ADMK inter politics jayalalitha posters erode

இந்த நிலையில்தான், ஜெயலலிதாவின் 4 -ஆம் ஆண்டு நினைவு தினத்திற்காக ஜெயலலிதா படம் போட்ட போஸ்டரில், 'தெய்வமாய் வானில் இருந்து ஒளி வீசும் தாயே' என அச்சடித்து, பெருந்துறை தொகுதி முழுக்க போஸ்டர் ஒட்டி வைத்திருந்தார் ஜெயக்குமார். 4ஆம் தேதி நள்ளிரவு ஜெயலலிதா ஃபோட்டோவுடன் இருந்த அந்த போஸ்டர்களை பல இடங்களில் பொடி பொடியாகக் கிழித்துப் போட்டுவிட்டது ஒரு கும்பல்.

"இது ஏதோ எதிர்க்கட்சிக்காரன் செய்த சதிசெயல் இல்லை. அம்மாவின் தயவால் உயர்ந்த பதவிகளைப் பெற்ற சுயநலக் கும்பல்தான், அம்மாவின் படத்தைக் கிழித்து அவருக்கு அவமரியாதை செய்திருக்கிறார்கள். கட்சித் தலைமையின் கவனத்திற்கு இதைக்கொண்டு செல்வேன்" எனக் கூறினார் ஜெயக்குமார். எம்.எல்.ஏதோப்பு தரப்போ, "ஜெயக்குமார் உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டவர். அவர் கட்சியின் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டவர்" என்கிறார்கள்.

admk Erode
இதையும் படியுங்கள்
Subscribe