Skip to main content

“பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டுமில்லை, உறவும் இல்லை” - ஜெயக்குமார் திட்டவட்டம்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
"ADMK has no connection and relationship with BJP" - Jayakumar

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதனையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கூட்டத்திற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தலைமை தாங்கியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவினருடன் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டுமில்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம். கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்