உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் ஒரு கோடியைத் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வழங்கியுள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவிக்கும் போது, "கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கரோனா தடுப்பு பணிக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலுருந்து ரூபாய் 1,00,00,000 (ஒரு கோடி) வழங்கி உள்ளேன்" என்று கூறியிருந்தார்.இதனையடுத்து செந்தில் பாலாஜி கொடுத்த நிதியை வாங்க முதலில் ஒப்புக்கொண்ட மாவட்ட நிர்வாகம் தற்போது வேண்டாம் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அதில், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று.இதை உடனடியாக முதல்வர் கவனிக்கவும்!என்று கூறியுள்ளார்.மேலும் இந்த நேரத்தில் அரசியல் செய்ய வேண்டுமா என்று திமுகவினரும், பொது மக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.