Skip to main content

அ.தி.மு.க.வின் மெஜாரிட்டியை காப்பாற்றிய தி.மு.க. உள்குத்து! - 9 தொகுதி முடிவு!

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

"கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம். 22 எம்.எல்.ஏ.தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க.வெற்றி பெறும், எடப்பாடி ஆட்சி கவிழும், நேர்வழியில் தி.மு.க. ஆட்சி மலரும்''’ என எம்.பி.தேர்தல் பிரச்சாரத்தின் போதே ஓங்கி அடித்துச் சொன்னார் கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின். ஆனால் அவர் சொன்னதற்கு நேரெதிராக மட்டுமல்ல, ஏறுக்குமாறாகவும்  நடந்து ஆட்சிக் கனவை தகர்த்திருக்கிறார்கள் சில தி.மு.க. வேட்பாளர்களும் மா.செ.க்களும் ஒ.செ.க்களும். 
 

 எம்.பி.தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையுடன் 22 எம்.எல்.ஏ.தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமான முதல் ஒரு மணி நேரத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி சம அளவில் முன்னிலை வகிக்க, தி.மு.க.-13, அ.தி.மு.க.-9 நிலவரமே கடைசி வரை நீடித்து முடிவும் வெளியானது. 

 

mks-eps


 

 கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போச்சுங்கிறதவிட, வாய்க்கு எட்டியதும் வாய்க்குள்ள போகாமப் போச்சுங்கிறதுதான் சரியா இருக்கும். அதிலும் சாத்தூர் தொகுதி தி.மு.க.வேட்பாளர் சீனிவாசனின் நிலைமையோ பரிதாபம். விருதுநகர் பாராளுமன்றத் தொகுதிக்குள் வரும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியை வெறும் 456 வாக்குகளில் கோட்டை விட்டிருக்கிறார் சீனிவாசன். 
 

 எம்.பி.தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இதே சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குள் 83,075 வாக்குகள் வாங்கியிருக்கிறார். ஆனால் இடைத்தேர்தல்  வேட்பாளர் சீனிவாசன் வாங்கியதோ 76, 521 வாக்குகள். இதே சாத்தூர் சட்டமன்றத் தேர்தலில் 2016-ல் சீனிவாசன் போட்டியிட்ட போது, 4,427 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இப்போது "அ.ம.மு.க. தனியா நிக்குது, அ.தி.மு.க. ஓட்டு பிரியுது, அதனால நான் தான் ஜெயிப்பேன்' என மிதப்பில் இருந்துவிட்டார் சீனிவாசன். பணத்திற்கு பஞ்சமில்லாத பார்ட்டி என்றாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் துணையுடன் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் வாரியிறைத்த கரன்சிக்கு முன்னால் சீனிவாசனால் ஈடு கொடுக்க முடியவில்லை. 
 

"நாங்கள் வெற்றி பெற்றால் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்வோம் என ராஜவர்மனும் ர.ர.க்களும் பிரச்சாரத்தில் அதிரடி கிளப்பினார்கள் என்றால் பிதாவே என்னை கண் திறந்து பாருமய்யா' என்ற ரேஞ்சுக்கு பிரச்சாரம் பண்ணியது தி.மு.க. எல்லாவற்றையும்விட மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆரோ, "ஏம்பா நீங்கெல்லாம் முன்னால போங்க, வெயில் தாழ்ந்ததும் நான் வர்றேன்’’ எனச் சொல்லி பிரச்சாரக் களத்தில் மந்தமாகவே இருந்தார். போன தேர்தலின் போதே மா.செ.வுக்கும் சீனிவாசனுக்கும் பண விஷயத்தில் உரசல் இருந்தது. ஆனா இந்தத் தேர்தலின் போது ஓட்டுக்கு 500 ரூபாய்னு 80 சதவிகிதம் கொடுக்கத்தான் செஞ்சாரு. ஆனா ராஜவர்மன் அள்ளி இறைத்த 2000-க்கு முன்னால 500 எடுபடுமா போச்சு. அப்புறம் முக்கியமான விஷயம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியும் மா.செ.கே.கே.எஸ்.எஸ்.ஆரும் கட்சி அரசியலைக் கடந்த நட்பு பாராட்டியதால்தான் சீனிவாசனின் வெற்றி நூலிழையில் தப்பிருச்சு'' என்கிறார்கள் விருதுநகர் மாவட்ட ர.ர.க்கள். 


 

 

இப்படி கண்ணுக்குத் தெரியாத உள்குத்தால் 456 வாக்கு வித்தியாசத்தில் சீனிவாசன் தோல்வியைத் தழுவியிருக்கிறார். ஆளுமை மிக்க மா.செ.வான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் விருதுநகர் மாவட்டம் சாத்தூரின் கதை இப்படி என்றால் கட்சியின் து.பொ.செ.வாக இருக்கும்  ஐ.பெரியசாமியின் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை தி.மு.க. கோட்டைவிட்டது பெருங்கதை. 
 

இத்தொகுதியின் தி.மு.க.வேட்பாளர் சௌந்தர பாண்டியனை 20,675 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார் அ.தி.மு.க.வின் தேன்மொழி.  ஓ.பி.எஸ்.சின் சொந்த ஊரான பெரியகுளத்திலேயே, எம்.பி.வேட்பாளரான அவரது மகன் ரவீந்திரநாத் எப்படி 7 ஆயிரம் ஓட்டு குறைவாக வாங்கினாரோ, அதே போல் ஐ.பி.யின் சொந்த ஊரான நிலக்கோட்டை ஒன்றியத்தில் வரும் வத்தலகுண்டுவில் தி.மு.க.வின் சௌந்தர பாண்டியன் 3 ஆயிரம் ஓட்டுகள் குறைவாக வாங்கியிருக்கிறார். 
 

இதற்குக் காரணம் ஒன்றியத்திற்குட்பட்ட விராலிப்பட்டி, தும்மலப்பட்டி ஊராட்டிகளின் தி.மு.க. கி.செ.க்கள் ஆளும் கட்சியினரின் அரவணைப்பில் அமைதியாகிவிட்டனர். இதே போல் நிலக்கோட்டை வடக்கு ஒ.செ. செல்வராஜ், தெற்கு ஒ.செ. மாயாண்டி, நிலக்கோட்டை பேரூர் கழகச் செயலாளர் கருணாநிதி, அம்மையநாயக்கனூர் பேரூர் கழகச் செயலாளர் செல்வராஜ் உட்பட தங்கள் கடன் கம்மென்று இருப்பதே என்ற சைலண்ட் மோடுக்குப் போய்விட்டார்கள். திண்ணைப் பிரச்சாரம், தெருப் பிரச்சாரம் என ஐ.பி. சுற்றிச் சுற்றி வந்தாலும் பல தி.மு.க.நிர்வாகிகள் தேன்மொழியின் கணவர் சேகருடன் கைகோர்த்து திரிந்ததை கட்டுப்படுத்த முடியவில்லை. 
 

""தொகுதியில் இருக்கும் 17 ஆயிரம் கிறிஸ்தவர்கள் ஓட்டுகள் தேன்மொழிக்கு கை கொடுத்தது. அதை ஐ.பி.எப்படி கோட்டை விட்டாருன்னு தெரியல. மேலும் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் தளபதி நீக்கவில்லை என்றால், தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இருந்த போதுதான், இத்தொகுதியில் தி.மு.க. ஜெயித்தது. அதன் பின் ஜெயிக்கவேயில்லை. அந்த நிலைமைதான் தொடரும்’’என கொந்தளிக்கிறார்கள்  வத்தலகுண்டு உ.பி.க்கள்.
 

மேற்கண்ட இரு தொகுதிகளைவிட சூலூர் தொகுதியின் தோல்வி தான் தி.மு.க. முகாமில் டெர்ரரை கிளப்பியுள்ளது. கொங்கு மண்டலத்தின் அனைத்து எம்.பி. தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் போது, சூலூரில் 10,113 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியிருக்கிறார் தி.மு.க.வின் பொங்கலூர் பழனிச்சாமி. 

 

dmk


 


""சொத்து சுகம், காசு, பணம், துட்டு, மணி இதையெல்லாம் தனது குடும்பத்திற்குச் சேர்க்கத் தெரிந்த பொங்கலூராருக்கு, கட்சிக்காரனுக்கு செலவு பண்ணனும்னா வேப்பங்காயா கசக்கும். மத்தவன் ஜெயிச்சா நாம வளர முடியாதுன்னு இதற்கு முந்தைய தேர்தல்களில் எங்க கட்சி வேட்பாளர்களையே தோற்கடிச்சாரு. அதிலும் முக்குலத்து சமூகத்தைச் சேர்ந்த பல்லடம் பொன்முடியை 2006-ல் நடந்த தேர்தலில் அப்பட்டமா உள்ளடி வேலை பார்த்து காலி பண்ணுனாரு. சூலூர் தொகுதியில் இருக்கும் அந்த சமூகத்தின் 25% ஓட்டுக்கள் தான் இப்ப பொங்கலூருக்கு பொங்கல் வச்சிருச்சு. இதையெல்லாம்விட முக்கியக் காரணம், அமைச்சர் வேலுமணியை, பொங்கலூரால் சமாளிக்கவே முடியலீங்க'' என ரொம்பவே ஆதங்கப்பட்டார்கள். 
 

சிவகங்கை எம்.பி.தொகுதி வேட்பாளரான கார்த்தி சிதம்பரம், இத்தொகுதிக்குள்ளடங்கிய மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில், பா.ஜ.க.வின் எச்.ராஜாவைவிட 36 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக வாங்கியிருக்கிறார். ஆனால் எம்.எல்.ஏ.வேட்பாளரான தி.மு.க. இலக்கியதாசன், அ.தி.மு.க.வின் நாகராஜனிடம் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறி கொடுத்திருக்கிறார். வைகைநதியே வத்திப் போய்க்கிடந்தாலும் ஆளும் கட்சியின் கரன்சி நதி வற்றாததன் எஃபெக்டே நாகராஜனின் வெற்றிக்கு அடிப்படை. 
 

""வாக்குப் பதிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மா.து.செ.சேங்கைமாறனிடம் 30 லட்சம் கொடுத்திருக்கிறார் தேர்தல் பொறுப்பாளரான மு.தென்னவன். ஆனால் அந்தப் பணம்…..? 18, 19, 20-ஆவது சுற்றுகளில் முன்னிலை பெற்றது தி.மு.க. ஆனால் 21, 22, 23 ஆவது சுற்றுகளில் அ.தி.மு.க. லீடிங் எடுத்து வெற்றியும் பெற்றுவிட்டது. இதற்கு காரணம் மா.செ. பெரியகருப்பனும் மா.து.செ. சேங்கைமாறனும் தான்''’’ என அடித்துச் சொல்கிறார்கள் மானாமதுரை உ.பி.க்கள். 


 

 

இது பரமக்குடி சட்டமன்றத் தொகுதியின் தோல்விக் கதை. இராமநாதபுரம் எம்.பி. தொகுதிக்குள் வரும் இத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் முஸ்லிம் லீக்கின் நவாஸ் கனி வாங்கியது 65,263 வாக்குகள். அ.தி.மு.க. கூட்டணியின் பா.ஜ.க. நயினார் நாகேந்திரன் வாங்கியது 81,676 வாக்குகள். எம்.எல்.ஏ. வேட்பாளரான அ.தி.மு.க. சதன் பிரபாகர் 82,348 ஓட்டுக்கள் வாங்கினார் என்றால், தி.மு.க.வின் சம்பத்குமார் 68,406 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். 
 

""32 வயசு பயலுக்கு சீட் கொடுத்திருக்காங்க. இத்தனை நாள் கட்சியில் நாம இருந்து என்ன பிரயோஜனம்'' என விரக்தியடைந்த ஜெயக்குமாரும் திசைவீரனும் திசை மாறிவிட்டார்கள். தளபதியின் கட்டளைக்குப் பயந்து கடைசி வரை பிரச்சாரக் களத்தில் இருந்தது மாஜி மா.செ.வான சுப.த.திவாகர்தான். இப்ப இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர் முத்துராமலிங்கமும் அவரது ஆட்களும் கடைசிக் கட்டத்தில் சம்பத்குமாரையும் நவாஸ்கனியையும் டென்ஷனாக்கிவிட்டார்கள். முத்துராமலிங்கத்திடம் கவுண்டிங் ஏஜெண்டுக்கு லிஸ்ட் கேட்டு, கிடைக்காமல் நொந்து போன நவாஸ்கனி, ஒ.செ., ந.செ.க்களை நேரடியா தொடர்பு கொண்டு லிஸ்ட் வாங்கும்படி ஆகிப்போச்சு. இப்படி பல கோளாறுகளால் பரமக்குடி தொகுதியும் போச்சு'' என்று புலம்புகிறார்கள் மாவட்ட உ.பி.க்கள். 
 

இது சோளிங்கர் சோகம். அரக்கோணம் எம்.பி.தொகுதிக்குள் வரும் இந்த சட்டமன்றத் தொகுதியில் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறார் தி.மு.க. வேட்பாளரான அசோகன். இங்கே கொடி கட்டிப் பறந்தது ஜாதி மட்டுமே. அ.தி.மு.க. வேட்பாளரான சம்பத், வன்னியர் என்பதால், தி.மு.க.வின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒ.செ.மாணிக்கமும் கிழக்கு ஒ.செ. பிரகாஷும் தா.தா.தை.தரிகிடதை போட்டுவிட்டார்கள். எம்.பி.வேட்பாளரான தி.மு.க.வின் ஜெகத்ரட்சகன், சோளிங்கர் தொகுதியில், அ.தி.மு.க.வைவிட 16,800 ஓட்டுகள் அதிகம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தர்மபுரி எம்.பி.தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோற்கடிப்படுகிறார். ஆனால் அதே எம்.பி. தொகுதிக்குள் வரும் அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய இரண்டு எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களான சம்பத்குமாரும் கோவிந்தசாமியும் வெற்றி வாகை சூடியிருக்கின்றனர். அரூரில் 9,529 வாக்குகள், பாப்பிரெட்டிபட்டியில் 18,305 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர்களான கிருஷ்ணகுமார், மணி ஆகியோரை தோற்கடித்திருக்கிறார்கள்.  ""எங்க மா.செ. தடங்கம் சுப்பிரமணியும் சரி, கீழ்மட்ட நிர்வாகிகளும் சரி, ஏ.டி.எம்.கே. அளவுக்கு மக்களிடம் நெருங்கவேயில்லை. நல்ல வேளை தர்மபுரியாவது தப்பிச்சுது'' என்கிறார்கள் பாப்பிரெட்டிபட்டி உடன்பிறப்புகள். 
 

"அ.தி.மு.க.வில் சீட் கிடைக்காத கோபத்தில் தினகரனின் தூண்டுதலில் சுயேட்சையா நிக்குது மார்க்கண்டேயன். அ.தி.மு.க.வும் நிக்குது, அ.ம.மு.க.வும் நிக்குது அதனால நம்பள் ஜெயிக்குது என மார்வாடி ரேஞ்சுக்கு உருண்டை தலையணையில் கையை வைத்து விளாத்திகுளம் எம்.எல்.ஏ.தொகுதி  தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் யோசித்திருப்பார் போல. ஆனால் நிம்பள நம்பள் கவுக்குது' என கவிழ்த்துவிட்டார்கள் வாக்காளர்கள், அதுவும் 28,554 ஓட்டுகள் வித்தியாசத்தில். தூத்துக்குடி எம்.பி.தொகுதிக்குள் அடங்கிய விளாத்திகுளம் தொகுதியில் கனிமொழி 79,039 ஓட்டுகள் வாங்கியுள்ளார். சரி, கனிமொழி ஜெயிச்சா போதும்னு மா.செ.கீதா ஜீவன் நினைச்சிருப்பார் போல என்கிறார்கள் உ.பி.க்கள். 
 

50 ஆண்டுகளுக்கும் மேலாக, தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள், கட்சியின் மீது அபரிமிதமான பிடிப்புடன்தான் இருக்கிறார்கள். ஆனால் மொடமொட வேட்டி, சட்டையுடன் குளுகுளு கார்களில் பவனி வரும் முக்கால்வாசி நிர்வாகிகள்..? 
 

-ராம்கி, ஈ.பா.பரமேஷ், பரமசிவன், அருள்குமார், ராஜா, நாகேந்திரன் 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.