சில வாரத்திற்கு அதிமுக பெயரில் போலி இணையதளம், உறுப்பினர் சேர்க்கை நடத்தியதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சூலூரைச் சேர்ந்த காவலர்கள் 10- க்கும் மேற்பட்டோர் கோவையில் கே.சி.பழனிச்சாமியின் வீட்டில் அவரை கைது செய்தனர்.
பின்னர் பிப்.7 ஆம் தேதிவரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று நிபந்தனை ஜாமீனில் கோவை சிறையிலிருந்து வெளியே வந்த கே.சி.பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "என்னை ஒரு முறை அல்ல, 100 முறை ஜெயிலில் வைத்தாலும் நான் அதிமுக கட்சிக்காரன்தான். நான் அதிமுக காரன் இல்லை என்று கூறுவதற்கு என்ன எவிடென்ஸ் வைத்திருக்கிறார்கள். என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்காக ஆதாரங்கள் எதுவும் வைத்து இருக்கிறார்களா?. கட்சியில் இருந்து நீக்கியதாக எனக்கு எந்த ஒரு கடிதமும் வரவில்லை.
எனக்கு ஜாமீன் கிடைத்து விட்டது என்று சில நாட்களுக்கு முன்போ சொல்லிவிட்டார்கள். சொன்னவுடனேயே பேக்கத் தூக்கிட்டு நான் கிளம்பிட்டேன். போலீஸ் தான் விடவில்லை. ஏன் விடமாட்டிக்கிறீங்க என்று கேட்டதற்கு பேப்பர்ல வர்ற செய்தி எல்லாம் கணக்கு கிடையாது.
கவர்மெண்ட்ல இருந்து எழுத்து பூர்வமா ஒரு கடிதம் கொடுப்பாங்க. அப்பதான் அதிகாரப் பூர்வமா நீங்க வெளியே வரமுடியும் என்று கூறினார்கள். ஆனால் இவர்கள் பத்திரிக்கைகளை கூப்பிட்டு வாய்மொழியா என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக கூறினார்கள். அப்ப அது கணக்கில் சேராது. என்னைய கட்சியை விட்டு நீக்கியதாக எந்த ஒரு ஆதாரமும் கொடுக்கப்படலை" என தெரிவித்தார்.