ADMK Former Minister says There is absolutely no chance of a coalition govt

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதே சமயம், ‘2026இல் பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என மத்திய உள்துறை அமித்ஷா மற்றும் அக்கட்சியினர் கூறி வந்தனர். மற்றொரு புறம் அதிமுகவினர் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் இந்த 2 கட்சியினருமே கூட்டணி ஆட்சி குறித்த தகவல்களை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசக்கூடாது என அக்கட்சிகளின் சார்பில் கட்டுப்பாடுகள் விதித்கபட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் ஈரோட்டில் இன்று (20.06.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வருவார்கள் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள். நீங்கள் எந்த கட்சி கூட்டணிக்கு வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “அதிமுக முழு ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்.

அதில் எந்த மாற்றமும் கிடையாது. யார் யார் வருவாங்கறது எல்லாம் பின்னாடி தெரியும். எல்லாரும் எல்லாருட்டயும் பேசிக் கொண்டு இருப்பார்கள். அதனால் எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்று ஒரு மூன்று மாசம், நான்கு மாசத்துக்குள் உறுதியான கூட்டணி தெரிய வரும். அதில் நல்ல கூட்டணி அமையும் என்பது எடப்பாடி பழனிசாமியின் வியூகம். கண்டிப்பா கூட்டணி ஆட்சிங்கறதுக்கு வாய்ப்பில்லை. தனிப் பெரும்பான்மையுடன் கண்டிப்பா அதிமுக ஆட்சி அமைக்கும்” எனத் தெரிவித்தார்.