ADMK executive committee meeting to be held today

தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக - பாஜக இடையே அதிகாரப்பூர்வமாகக் கூட்டணி அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் முதல்முறையாக அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (02.05.2025) மாலை 04:30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது.

Advertisment

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்தது ஏன் என்பது குறித்து செயற்குழு உறுப்பினர்களுக்குக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் விளக்கம் அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை அதிமுக தலைமை வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 25ஆம் தேதி (25.04.2025) அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.