ADMK Election Manifesto Committee Ask people for feedback

Advertisment

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

அந்தவகையில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ். மணியன், உதயகுமார், வைகைச்செல்வன் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்று முதல் மண்டல வாரியாக பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்க உள்ளது.

அதன்படி இந்த குழு இன்று (05.02.2024) முதல் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். முதற்கட்டமாக இன்று காலை சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அதிமுக தேர்தல் அறிக்கைக் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது. இதனையடுத்து இன்று மாலை வேலூருக்குஇந்தக் குழு பயணம் மேற்கொள்ள உள்ளது. நாளை விழுப்புரம் மண்டலத்திலும், 7 ஆம் தேதி தஞ்சாவூர், திருச்சி மண்டலத்திலும், 8 ஆம் தேதி கோவை, மதுரை மண்டலத்திலும், 10 ஆம் தேதி திருநெல்வேலி மண்டலத்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.