தமிழக முதல்வரும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருச்சி சென்றுள்ளார். இதில், இன்று காலைதொட்டியம் பகுதியில் வாழைத்தோட்டங்களைப் பார்வையிட்டு, வாழை விவசாயிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாக்குத் தோட்டம்பண்ணைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். மதியம் கண்ணனூர், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளைச் சந்தித்துவிட்டு, மண்ணச்சநல்லூர் பகுதியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி ஆலைத் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அதன்பின், லால்குடி பகுதியில் அ.தி.மு.க. முன்னோடிகளோடு கலந்துரையாடினார். திருச்சி மாநகரப் பகுதிக்குள் வர உள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டு வருகிறது. தெற்கு மாவட்டச் செயலாளர் பா.குமார் தலைமையில் செய்யப்பட்டுள்ள இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள வட்டக் கழகச் செயலாளர்கள் மூலம்புது நோட்டுப் போட்டு, அதில்அவர்கள் அழைத்து வந்தவர்களின் பெயர்கள், முகவரி, உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொண்டு மொத்தமாக வட்டக் கழகச் செயலாளரிடம், பொறுப்பாளர்கள் பணத்தைப் பிரித்துக் கொடுத்து வருகின்றனர்.

Advertisment

தலைக்கு 200 ரூபாய் என ஆண், பெண் பாரபட்சம் இல்லாமல் கொடுத்து வருகின்றனர். இதனால் முதலமைச்சரை வரவேற்க பெண்கள் அதிகளவில் வந்துள்ளனர்.அதேபோல், மாநகரப் பகுதியிலும், முதல்வர் வருகைக்கு ஏற்பாடு செய்திருக்கும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் பொறுப்பாளர்களை நியமித்து, தலைக்கு 200 ரூபாய் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வருக்கு கும்ப மரியாதை செலுத்த தயார் நிலையில் உள்ள பெண்களுக்கு 300 ரூபாய்வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். வார்டு வாரியாக ஒவ்வொரு பிரதிநிதிகளை நியமித்து, அவர்கள் மூலம் பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களும் தங்களுடைய பட்டியலின் படி, கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ள வட்டப் பிரதிநிதிகள் மூலம் பணத்தைப் பிரித்துக்கொடுத்துள்ளனர். இதனால் புறநகர், மாநகர்ப் பகுதிகளில் பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது.