Advertisment

இனிமேல் சென்னை நமக்குச் சரிப்பட்டு வருமா? தீவிர ஆலோசனையில் கோகுல இந்திரா... திமுக, அதிமுகவின் உட்கட்சி அரசியல் நிலவரம்!

admk

சீனியர் சுப.தங்கவேல் கோலோச்சிய காலம் வரை ராமநாதபுர மாவட்ட தி.மு.க.வில் அவரை நேரடியாக எதிர்த்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சுப.த.மகன் திவாகரன் மா.செ.வாகி, 2016 தேர்தலில் தோற்றதும் காட்சிகள் மாறின. மா.செ. பதவியைக் கைப்பற்ற பெருநாழி போஸ், மாஜி எம்.பி. பவானி ராஜேந்திரன், மாஜி. எம்.எல்.ஏ. முருகவேல் ஆகியோர் முட்டி மோதினார்கள்.

Advertisment

சபரீசன் நெட்வொர்க் மூலம் மாவட்ட பொறுப்பாளர் ஆனார் மறைந்த காதர்பாட்ஷா (எ) வெள்ளைச்சாமியின் மகன் முத்துராமலிங்கம். அப்செட்டான திவாகரன் ஆதரவாளர்கள், முத்துராமலிங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்கள். இருதரப்பிலும் தலைமைக்கு மாறி மாறி புகார் அனுப்பப்பட்டது. இந்த நேரத்தில்தான் உள்ளாட்சித் தேர்தல் வந்தது. திவாகரன் ஆதரவாளர்கள் மெல்ல மெல்ல முத்துராமலிங்கம் முகாமிற்குள் வர ஆரம்பித்தனர்.

Advertisment

dmk

தனது மனைவி பார்வதி கவுன்சிலராகும் வரை திவாகரன் ஆதரவாளராக இருந்த சாயல்குடி ஒ.செ. ஜெயபால், மனைவியைக் கடலாடி ஒன்றிய சேர்மனாக்கும் ஆசையில் முத்துராமலிங்கம் முகாமிற்குத் தாவினார். கட்சியினரின் உள்குத்துகளால் கடலாடி அ.தி.மு.க. ஒ.செ. முனியசாமி பாண்டியனின் மகள் முத்துலட்சுமியிடம் பரிதாபமாக தோற்றுப்போனார் பார்வதி. இதைப்போல் இராமநாதபுரம் ஒன்றிய சேர்மன் ரேஸில் குதித்தார் கட்சியின் ஒ.செ.வும் சுப.த.வின் நெருங்கிய உறவினருமான கே.டி.பிரபாகர். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தனது ஆதரவாளரை களமிறக்கினார் முத்துராமலிங்கம். ஆனால் பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவுடன் பிரபாகரன் ஒன்றிய சேர்மனாகிவிட்டார். இப்போது முத்துராமலிங்கத்தின் ஆதரவாளராகவும் மாறிவிட்டார். இந்த முட்டல் மோதல்களுக்கிடையேதான் கரோனா ஊரடங்கு வந்தது.

"ஒன்றிணைவோம் வா"திட்டத்தைச்செயல்படுத்தினார் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்திலோ, "விலகி நிற்போம் போ' என்ற ரீதியில் இரு கோஷ்டிகளும் தனித்தனியாக நிவாரண உதவிகளை வழங்க ஆரம்பித்தனர். இதே ரீதியில்தான் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளும் நடந்தன.

கடலாடி தாலுகா நீதிமன்ற வக்கீல்கள் சங்க செயலாளர் போ.பூமுருகனிடம் கேட்டபோது, "துடிப்பான இளைஞர் முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளர் ஆனது இங்கே பலபேருக்கு பிடிக்கல. அதனால் அவரைப் பற்றிகுற்றம் சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க. கட்சிக்காரர்களை அரவணைத்து அவர்களுக்குத்தேவையான உதவிகளையும் செய்றதாலத்தான் மாவட்டத்தின் பெரும்பான்மை ஒ.செ.க்கள் முத்துராமலிங்கம் பின்னால் நிற்கிறார்கள்'' என்றார். ஆனால் இதற்கு நேர் எதிரான குற்றச்சாட்டுகளை வைக்கிறார் திவாகரனின் ஆதரவாளரான நயினார்கோயில் மாஜி ஒ.செ. வேலாயுதம். எல்லாவற்றுக்கும் விளக்கம்பெற மா.பொ. முத்துராமலிங்கத்தைத் தொடர்புகொண்டபோது நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பதில் இல்லை.

dmk

சுப.த.திவாகரனை தொடர்புகொண்டபோது, "அவருடன் சேர்ந்து செயல்பட நான் தயார்தான். ஆனால் அவர்தான் திட்டமிட்டே என்னைப் புறக்கணிக்கிறார். அதற்காக தலைவர் பிறந்தநாளையும், நிவாரண உதவி நிகழ்வையும் நடத்தாமல் இருக்க முடியுமா?'' என்றார்.

சீட் கணக்குகள்!

மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி, மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் மாஜி அ.தி.மு.க. வி.ஐ.பி.யான ராஜ.கண்ணப்பன். மதுரை அல்லது இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதி என்பது தான் அவரது டீல். மதுரை கிழக்கு தொகுதி பக்கம் அவர் பார்வை திரும்புவதை அறிந்து பதறிய மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான மூர்த்தி, பக்குவமாகப் பேசி ராஜகண்ணப்பனின் பார்வையை இராமநாதபுரம் பக்கம் திருப்பிவிட்டார். திருவாடானை அல்லது முதுகுளத்தூர் தொகுதியைக் கைப்பற்றும் கோதாவில் இறங்கியுள்ளார் கண்ணப்பன். அதிலும் யாதவர்கள் மெஜாரிட்டியாக உள்ள முதுகுளத்தூர் தொகுதியை பெட்டர் சாய்ஸாக நினைக்கிறாராம். இதனால் தி.மு.க. மா.பொ. முத்துராமலிங்கம், திகிலடைவதைவிட… அதிக திகிலானவர், தொகுதியின் தற்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான மலேசியா பாண்டியன். எடப்பாடி புகழ்பாடி வந்தவர் இப்போது கலைஞர், ஸ்டாலின், முத்துராமலிங்கம் படங்களை அச்சிட்ட ஸ்வீட் பாக்ஸ்களை தொகுதிக்குள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த ஐடியாவை கொடுத்தது நவாஸ்கனி எம்.பி.தானாம்.

இது அ.தி.மு.க. ஏரியா!

மணிகண்டன் மந்திரியாக இருந்தவரை அடக்கி வாசித்த மா.செ. முனியசாமி, 2016 தேர்தலில் மலேசிய பாண்டியனிடம் தோற்ற தனது மனைவி கீர்த்திகாவை, அதே தொகுதியின் எம்.எல்.ஏ. வாக்கிட வேண்டும் என்ற லட்சியத்துடன் களத்தில் குதித்துவிட்டார்.

தொகுதியில் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் கரோனா நிவாரணப் பைகளை சகட்டு மேனிக்கு சப்ளை பண்ணிவிட்டார் முனியசாமி. உஷாரான எதிர்கோஷ்டியினர், இம்மாவட்ட கட்சிப் பஞ்சாயத்துகளை கவனிக்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் சரண்டராகிவிட்டனர். அண்ணே நீங்க முதுகுளத்தூர் தொகுதியில் நில்லுங் கண்ணே என அவரை உசுப்பேத்தி வருகின்றனர்.

http://onelink.to/nknapp

இனிமேல் சென்னை நமக்குச் சரிப்பட்டு வருமா? என்ற யோசனையில் இருக்கும் கோகுல இந்திராவும், முதுகுளத்தூரை நோக்கிப் பார்வையைத் திருப்பியுள்ளாராம். ஆளும் கட்சியிலும் சரி, எதிர்க்கட்சியிலும் சரி… கரோனாவிலும் ஓயவில்லை கோஷ்டிகளும் கணக்குகளும்.

issues politics admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe