ADVERTISEMENT

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

11:04 PM Mar 19, 2024 | prabukumar@nak…

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT