Skip to main content

விதிகளை மீறி குளறுபடி செய்த அதிமுக... மேயர் தேர்தலை தடுக்க திட்டம்... எடப்பாடிக்கு செக் வைக்கும் திமுக!

தேர்தலை நடத்தவிடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் அ.தி.மு.க. அரசு செய்தது. பஞ்சாயத்து ராஜ் விதிகளை மீறி குளறுபடிகளோடு தேர்தல் அறிவிப்பை அ.தி.மு.க. அரசு வெளியிடுவதும், அதை எதிர்த்து தி.மு.க. நீதிமன்றம் செல்வதுமாக உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிக் கொண்டே இருந்தது.

முறைப்படி தேர்தல் நடத்தக்கோரி திமுக நீதிமன்றம் சென்றாலும், தி.மு.க.வால்தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்று அ.தி.மு.க. கூறிவந்தது. தி.மு.க.வின் நீதிமன்ற நடவடிக்கைகளால் வார்டு வரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

 

politicsபெரும்பாலும் இங்கு உள்ளூர் செல்வாக்கு, சாதி பலம், பணபலம் போன்றவைதான் வெற்றியைத் தீர்மானிக்கும். எனவே, பணத்தை வாரியிறைத்து உள்ளாட்சித் தேர்தல்களில் ஒரு வெற்றியை உறுதி செய்துவிட்டால் 2021 சட்டமன்றத் தேர்தலை சமாளிக்கலாம் என்று அ.தி.மு.க. திட்டமிட்டது.

தி.மு.க.வுடன் பல மாவட்டங்களில் இணக்கமான உடன்படிக்கை என்றும், அ.தி.மு.க.வுக்கு எதிராக வீக்கான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் செய்திகளை கசியவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கே உரிய கூட்டணி குணாம்சங்களும் வெளிப்படத்தான் செய்தன. அ.தி.மு.க. கூட்டணியில் மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணியிலும் இந்த புகைச்சல் இருந்தது.

 

admkஆனால், இதையெல்லாம் மீறி தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு ஓரளவுக்கு தெம்பூட்டுவதாகவே அமைந்தன. மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளிலும் அ.தி.மு.க.வின் எதிர்பார்ப்பை தகர்த்து தி.மு.க. வேட்பாளர்கள் பல மாவட்டங்களில் வெற்றிபெற்றனர். அ.தி.மு.க.வின் கோட்டை எனப்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் தி.மு.க. முன்னேறியது. எடப்பாடிக்கு செல்வாக்கான பகுதி என்று கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில்கூட தி.மு.க. குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை பெற்றது.


அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், ராஜேந்திரபாலாஜி, கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரின் அதிகார பலத்தையும் மீறி அவர்களின் ஏரியாக்களில் தி.மு.க. அணி வெற்றியை பதிவு செய்தது. கிராமப்புறங்களில் எளிதாக பணம் கொடுத்து வெற்றிபெறலாம் என்ற அ.தி.மு.க.வின் கனவு தகர்க்கப்பட்டிருப்பதாகவே கருதப்படுகிறது.


இந்நிலையில்தான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக தேர்தல் அதிகாரியை திடீரென்று சந்தித்தார். தி.மு.க. வெற்றி பெற்ற பல இடங்களின் முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தியிருப்பதாக பகீர் புகாரை தெரிவித்தார். குறிப்பாக, எடப்பாடி பழனிச் சாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலேயே தி.மு.க. வெற்றிபெற்றிருப்பதையும் அதை அறிவிக்கவிடாமல் அவருடைய மைத்துனர் வெங்கடேசன் தடுப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தரப்பில் நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருக்கும் இடங்களில் தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தத் தொடங்கினார்கள். ஆளுங்கட்சியின் அராஜகம் தொடர்ந்தால் தேர்தல் ஆணையம் முன்பே மறியல் செய்யவும் யோசிப்பதாக ஸ்டாலின் எச்சரித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு 60 சதவீதம் வெற்றி கிடைத்தால் போதும் என்று அறிவாலயம் கணக்கிட்டிருந்தது. அந்தக் கணக்குக்கு நெருக்கமாக ஆளுங்கட்சியின் அதிகாரபலம், பணபலத்தைத் தாண்டி கிடைத்த முன்னிலை நிலவரங்கள் தொண்டர்களுக்கு தெம்பூட்டின.

ஆனால், தி.மு.க. வெற்றிபெற்றதை அறிவிக்கவிடாமல் இழுபறி என்ற தோற்றத்தை உருவாக்க அ.தி.மு.க. முயற்சிப்பது அம்பலமானதும் தி.மு.க.வினர் வேகம் காட்டினர். ஆளுந்தரப்பின் முறைகேடுகளை சட்டரீதியாக தடுத்துநிறுத்தும் முயற்சிகளை தி.மு.க. வழக்கறிஞர் அணி முன்னெடுத்தது. அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகள் எண்ணும் மையத்தின் முன் 50 வழக்கறிஞர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும், நள்ளிரவு ஆனாலும் நிறுத்தப்பட்ட தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி அறிவிப்பை வெளியிடும் வரை விட மாட்டார்கள் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்தார்.

மாவட்ட ஊராட்சித் தேர்தலில் பல மாவட்டங்களை தி.மு.க. வசப்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது முதல்வர் எடப்பாடியை அதிர்ச்சியடையச் செய்தது, அதிலும் அவர் வாக்களித்த வார்டிலேயே தி.மு.க. முன்னிலை பெற்றிருப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுபோலவே, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடியிலும் தி.மு.க. வெற்றிபெற்றதை அறிவிக்கவிடாமல் தடுப்பதாக புகார் எழுந்தது.

முடிந்தவரை, எதிர்த்தரப்பின் வெற்றியைத் தடுப்பதற்கான வியூகங்கள் வகுப்பது, அதன் அடுத்த கட்டமாக, மாவட்ட கவுன்சில் -ஒன்றிய கவுன்சில் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் ஜெயிப்பதற்கேற்ப கவுன்சிலர்களிடம் பர்சேஸ் பாலிசியை கடைப்பிடிப்பது என்பதுதான் ஆளுந்தரப்பின் இறுதி வியூகம். ஊரகத் தேர்தலின் ரிசல்ட்டால் நகராட்சி மற்றும் மேயர் தேர்தல்கள் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.