Skip to main content

கடத்தப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கதி என்ன? –மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

 

ஊரக உள்ளாட்சி மன்றங்களுக்கு சென்ற மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மூலம் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலும் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்ட தோடு வாக்குப்பெட்டி உடைப்பு மற்றும் தேர்தலில் பங்கெடுக்காமல் புறக்கணிப்பு என நடந்தது. இதனால் மாநிலம் முழுக்க பல்வேறு யூனியன் தலைவர்கள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடத்தப்படுகிறது. 

 

erode



ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திற்கு மொத்தம் 6 கவுன்சிலர்கள். இதில் திமுக 3, அதிமுக 3 என சமமான நிலையில் இருந்தது. சென்ற முறை நடைபெற்ற தேர்தலுக்கு திமுக கவுன்சிலர்கள் 3 பேரும் வந்திருந்தனர். ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வரவில்லை. அதற்கான காரணமாக கூறப்பட்டது அதிமுக கவுன்சிலர்கள் அக்கட்சியின் நிர்வாகிகள் கடத்திச் சென்று பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், அவர்கள் கட்சி மாறி அதிமுகவுக்கு வாக்களித்து விடக்கூடாது என்பதால் இதை செய்ததாகவும் கூறப்பட்டது. அப்படி கடத்தப்பட்ட அந்த மூன்று பேரும் இன்று நடைபெறும் தேர்தலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலை 10.30க்கு தேர்தல் தொடங்கியது.

அப்போது திமுக கவுன்சிலர்கள் 3 பேரும் வந்திருந்தனர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நேரம் கடந்த பிறகும் வராததால் மறைமுக தேர்தல் ரத்து செய்பப் பட்டதாகவும் மீண்டும் ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். 


 

அதிமுக கவுன்சிலர்களின் மூன்று பேரும் இப்போதும் ஏன் வரவில்லை என அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது கடத்தப்பட்ட அந்த மூன்று பேரும்  இன்னும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை விட்டால் வாக்களிக்க வருவார்கள் ஆனால் அதில் இரண்டு பேர் திமுகவுக்கு வாக்களிக்கும் மனநிலையில் இருப்பதால் கடத்தப்பட்ட அந்த மூன்று பேரையுமே எங்கள் கட்சி நிர்வாகிகள்  விடுதலை செய்யவில்லை, கடத்தப்பட்ட கவுன்சிலர்கள் 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை என்றார்கள்.
 

மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் ஈரோடு யூனியன் சேர்மன் பதவியை பிடிக்க அதிமுகவும் திமுகவும் உறுதியாக இருக்கிறது. குலுக்கல் முறையில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை தேர்ந்தெடுக்கலாம் என திமுக கூறினாலும், அதிமுக தரப்போ குழுக்களில் திமுக வந்து விட்டால் என்ன செய்வது என்று தான் அச்சமாக இருக்கிறது. எனவே தான் எங்கள்  கவுன்சிலர்களை  வாக்களிக்க வராமல் தடுத்து வைத்து இருக்கிறோம் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்