ADVERTISEMENT

மதுரையில் அதிமுக மாநாடு தொடங்கியது

09:48 AM Aug 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட அதிமுக மாநாடு இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 51 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். எடப்பாடி பழனிசாமி கொடியை ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர்கள் தூவப்பட்டன. புறாக்களை பறக்கவிட்டார். தற்போது அவரது தலைமையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபின் நடக்கும் முதல் மாநாடு இதுவாகும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அதிமுக மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடையில் பிரமாண்ட டிஜிட்டல் திரையும் 50 க்கும் மேற்பட்ட திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் படங்களுடன் பிரமாண்டமான நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளன. 60 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் மாநாட்டு மேடையும், சுமார் ஒரு லட்சம் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமரக்கூடிய வகையில் மாநாட்டு பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிமுகவின் 31 ஆண்டு கால வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என 12 மணிநேரம் மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை சிறப்புரை ஆற்றுகிறார். எடப்பாடி பழனிசாமியின் சிறப்புரைக்கு முன்பாக 10-க்கும் மேற்பட்ட மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. முன்னதாக எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT