ADMK Candidate A S Ramalingam victory banner

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக மக்களும் அரசியல் கட்சியினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை, தீவிர பிரச்சாரம், தேசிய தலைவர்கள் படையெடுப்பு என தமிழகத் தேர்தல் களம் அனல் பறந்தது. அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறித்த விஷயங்கள் தேர்தல் சூட்டிலேயே மக்களை வைத்திருந்தது. தற்போது அனைவரும் மே 2ஆம் தேதி எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி என காங்கயம் தொகுதிக்குட்பட்ட பழையகோட்டை பகுதியில் ஒரு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில் 13,483 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

தற்போது இந்த பேனர் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. அதேவேளையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கயம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம், இது யார் செய்தது எனத் தெரியவில்லை. என் பெயருக்கு களங்கம் விளைவிக்க யாராவது இப்படி செய்தார்களா அல்லது யார் செய்தது என விசாரணை செய்ய சொல்லியிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.தேர்தல் முடிவுக்கு முன்பாகவே அதிமுக வேட்பாளர் பெயரில் வெற்றி பேனர் வைக்கப்பட்டதால் அத்தொகுதி அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.