ADMK - BJP Alliance Breakdown ex-minister who disclosed the information

Advertisment

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்களால், அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு, அதிமுக - பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 25 ஆம் தேதி (25.09.2023) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியதாகவும், அதேசமயம் கட்சியின் 2 ஆம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இவ்வாறு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் காரசார விவாதம் நடந்து வந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். அதே சமயம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இருதரப்பு தலைவர்களும் கூட்டணி முறிவு குறித்த கேள்விகளுக்குப்பதில் அளிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் அந்தியூர் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் பேசுகையில், “2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டுமாம். அதன் மூலம் மோடி பிரதமர் ஆக வேண்டுமாம். அதே நேரம் 2026இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம். இதனை அதிமுகவினர் யாராவது ஏற்றுக்கொள்வார்களா. பாஜகவிற்கு எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் உள்ளது என்றும், எத்தனை பூத் கமிட்டியில் ஆட்கள் இல்லை என்றும் அதிமுகவிற்கு தெரியும்.

Advertisment

ADMK - BJP Alliance Breakdown ex-minister who disclosed the information

வாக்குச் சாவடியில் 5 பேர் 10 பேர் இருக்கிற ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி 2.5 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியை வலியுறுத்தினால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் அதிமுக - பாஜக கூட்டணி துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது” என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.