Skip to main content

அதிமுக வங்கிக் கணக்குகள் விவகாரம்; ரிசர்வ் வங்கியை நாடியுள்ள ஓ.பி.எஸ்

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

ADMK bank accounts issue; OPS  letter to Reserve Bank!

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவியானது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. 

 

இந்த நிலையில், தேர்தல் ஆணைய விதிகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளில் தானே தொடர்வதாகவும் தன்னைக் கேட்காமல் அதிமுக வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித வரவுசெலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கரூர் வைஸ்யா வங்கியின் மைலாப்பூர் கிளை மேலாளருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார்.

 

முன்னதாக, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது குறித்து வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், திண்டுக்கல் சீனிவாசனுக்கு அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கிடுமாறு வங்கிகளுக்கு குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தினை வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளில் எடப்பாடி தரப்பு மட்டுமே ஈடுபட முடியும் என்ற நிலை உருவாகியிருந்தது.  


இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ். ஆர்.பி.ஐ.க்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளையும் முடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 


மேலும் அந்தக் கடித்தத்தில், ‘அதிமுகவின் வங்கிக் கணக்குகள் முடக்க வேண்டும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனும் அடிப்படையில் ஏற்கனவே நான், வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனால், வங்கிகள் அதனை முறையாக செயல்படுத்தவில்லை. அதனால், உடனடியாக வங்கிகள் என் கடிதத்தை ஏற்று அதனை செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும். 

 

11ம் தேதி நடந்த செயற்குழு, பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் எங்கள் தரப்பில் முறையிட்டிருக்கிறோம். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால், வங்கிகளுக்கு என் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தின்படி தற்போதுவரை தாம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்