Advertisment

கூட்டணி விமர்சனம்... ஓ.எஸ்.மணியன் பதில்!

ADMK and BJP issue O S Maniyan comment

Advertisment

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில் மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “கட்சியிலிருந்து அவர்கள் சென்றது நல்லதுதான். அப்போதுதான் புதிய ஆட்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியும். ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளரும் என்றும் அந்த கட்சிகளில் இருந்து ஆட்களை கொண்டு வந்தால்தான் வளர முடியும் என்றும் பேசப்பட்டது. ஆனால், இப்போது பாருங்கள், பாஜகவில் இருக்கும் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகளைச் சேர்த்துத்தான் அவர்கள் வளர வேண்டும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இன்னும் யாரை வேண்டுமானாலும் அவர்கள் அதிமுகவிற்குள் இழுக்கட்டும். ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும். அதற்கான நேரமும் காலமும் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்” எனக் கடுமையாகப் பேசியிருந்தார்.

முன்னதாக, “பாஜகவிலிருந்து விலகிய நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக்கொண்ட, கூட்டணி தர்மத்தை போற்றத் தவறிய துரோகி எடப்பாடி பழனிசாமியை கண்டிக்கிறோம் என தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும், அந்த போஸ்டரில் ‘எடப்பாடி ஒரு துரோகி’ என்றும் குறிப்பிட்டனர். மேலும், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை எரித்தும் தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதனால் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில், இபிஎஸ் உருவப்படத்தை எரித்த தினேஷ் ரோடியை இடைநீக்கம் செய்து மாவட்டத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், நீக்கப்பட்ட தினேஷ் ரோடியை ஒரே இரவில் மீண்டும் பாஜகவில் சேர்த்து மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி உத்தரவிட்டிருந்தார். தினேஷ் ரோடியை மாவட்டத் தலைவர் வெங்கடேஷன் இடைநீக்கம் செய்த நிலையில், பொதுச்செயலாளர் பாலகணபதி அவரை மீண்டும் சேர்த்து, வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்ந்து செயல்படுவார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அண்ணாமலை, பாஜக தமிழ்நாட்டில் வளர திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. அவர் தனது மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து பாஜக - அதிமுக மோதல் மற்றும் அண்ணாமலை திராவிடக் கட்சிகளை விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அதிமுக தான் தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைமையேற்கும். யாருடன் கூட்டணி என்பதையும், யாருக்கு எத்தனை சீட் என்பதையும் அதிமுக தான் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

Annamalai admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe