
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று (20-05-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “திமுக அரசிடம் வெளிப்படத்தன்மை கிடையாது. அவங்களை பொறுத்தவரைக்கும் பிரச்சனைகளை மறைக்க வேண்டும் என்பது தான். எப்போதெல்லாம் பிரச்சனை வருகிறதோ, இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு ஆகிய பிரச்சனைகளை கையில் எடுப்பார்கள். ஊழல் குற்றச்சாட்டுகள் வரும் போது, அந்த பிரச்சனையை திசை திருப்புவதற்காக நாங்கள் மட்டும் தான் பா.ஜ.கவை எதிர்க்கிறோம் என்று சொல்வார்கள்.
வடகாடு பிரச்சனையில் கூட, திருமாவளவன் நேற்று போராட்டம் செய்தார். அவரிடம் ஒரே ஒரு கோரிக்கை வைக்கிறேன். மாத மாதம் இரண்டு மூன்று பிரச்சனைகள் வருகிறது, போராட்டம் செய்கிறார், போராட்டம் முடிந்த உடனே காவல்துறையை தாக்கிப் பேசுவார். அந்த காவல்துறையை யார் கையில் வைத்திருக்கிறார்கள்? யார் காவல்துறைக்கான அமைச்சரோ, அந்த அமைச்சரிடம் ஏன் முறையிடமாட்டிக்கிறார்? மூன்று நாட்களுக்கு பிறகு, திமுக அரசு சமூக நீதிக்கான அரசு என்று உடனே மாற்றி பேசுகிறார். அதனால், பட்டியலின மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். நாங்கள் திருமாவளவன் தாக்கி பேசவில்லை.
வேங்கைவயலில் பிரச்சனை ஆன உடனே அவர் அங்கு சென்று பார்த்தார். ஆனால் அதன் பிறகு, அந்த பிரச்சனை அதிகமானது. இந்த அரசு, இந்த பிரச்சனையை நியாயமாக விசாரித்து ஒரு முடிவெடுக்கும் என திருமாவளவன் நம்பினார். ஆனால், யார் மலம் கலந்த தண்ணீரை குடித்தார்களோ அவர்கள் மீதே போலீஸ் அறிக்கை கொடுக்கிறது. அப்போது, வேங்கைவயலில் அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலையை போட்டார்கள். அதன் பிறகு, விசிகவுடைய தோழர்கள், துணை பொதுச் செயலாளர்கள் நிறைய பேர் அங்கு போகும் போது போலீஸ் அவர்களை தடுத்தார்கள். அங்கு திருமாவளவன் போக வேண்டும் என்று அவர் முயற்சிக்கும் போது காவல்துறையில் இருக்கக் கூடிய உளவு பிரிவு அங்கு போகக் கூடாது என்று அவரை தடுத்துவிட்டார்கள். வேங்கைவயல் மக்கள் மிகவும் வலியோடு தங்கள் பிரச்சனைகளை கூறினார்கள். அதனால், இந்த வலிகளுக்கு ஆர்ப்பாட்டம் என்றும் தீர்வாகாது” என்று பேசினார்.